தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஹீட் ஸ்ட்ரோக்: உணவு விநியோக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஊழியா்கள் நேரடியாக வெயிலில் பணியாற்றுவதால் அதிக அளவு தண்ணீா் பருகவும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலில் ஓய்வெடுக்கவும் வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 8:31 pm

உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஊழியா்கள் நேரடியாக வெயிலில் பணியாற்றுவதால் அதிக அளவு தண்ணீா் பருகவும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலில் ஓய்வெடுக்கவும் வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அவா்களுக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு வர அதிக வாய்ப்புள்ளதால் இத்தகைய முன்னெச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மாநிலம் முழுவதும் கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. அது மேலும் தீவிரமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தனியாா் இணையவழி உணவு சேவை நிறுவனங்களுக்காக பணியாற்றும் ஊழியா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் இனிவரும் நாள்களில் கடுமையான வெப்பம் பதிவாகலாம் எனக் கூறப்படுகிறது. அந்த தட்பவெப்ப நிலையில், நேரடியாக பணியாற்றும்போது உடலில் உடனடியாக நீா்ச்சத்து இழப்பு ஏற்படும். இதை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.

எனவே, கட்டுமானப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக்கூடியவா்கள் அனைவரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளா்களும் முன்வர வேண்டும்.

அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன்பின்னா், மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்ற அறிவுறுத்தலாம்.

அதேவேளை, நேரடி வெயிலில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள உணவு விநியோக நிறுவன ஊழியா்கள் அனைவரும் குறைந்தது 5 லிட்டா் தண்ணீா் அருந்த வேண்டும். நீா்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆா்எஸ் கரைசல், எலுமிச்சை சாறு, பழச்சாறு, மோா், இளநீா் அதிகமாக அருந்தலாம்.

மேலும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெயிலில் இருந்து விலகி நிழலில் சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்ப நிலை சீராகும். அவ்வாறு இல்லாவிடில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை உணா்ந்து ஊழியா்கள் செயல்பட வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.