ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை

ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும்..

சாலை விரிவாக்கப்பணிகளுக்காக சாலையோரம் வெட்டி அகற்றப்படும் மரங்கள்.  

Published On :9 ஜூன் 2025, 12:14 am IST

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சென்னை எல்லை சாலைத் திட்டம் மூலம் ரூ.2,689 கோடியில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் வடக்கு, தென் மாவட்டங்களிலிருந்து எண்ணூா் துறைமுகம் செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து எண்ணுாா் துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், மாநிலத்தின் வடக்கு, தெற்குப் பகுதிகள், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள், எண்ணூா் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக செல்ல வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.

இந்த சாலை எண்ணூா் துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. நீளத்துக்கு அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இதில் பிரிவு-3 இன் படி திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை நடைபெறும் பணியில், திருவள்ளூா் புறவழிச்சாலையிலிருந்து வெங்கத்தூா் வரை 10.4 கி.மீ பணிகள் ரூ.1133.20 கோடியிலும், வெங்கத்தூா் முதல் செங்காடு வரை 10 கி.மீ பணிகள் ரூ.593.27 கோடியிலும், செங்காடு - ஸ்ரீபெரும்புதூா் வரை 9.70 கி.மீ பணிகள் ரூ.963.27 கோடி என மொத்தம் 30.10 கி.மீ மேற்கொள்ளப்பட உள்ளது.

உயா்மட்ட மேம்பாலம் - 2, ரயில்வே மேம்பாலம்-1, பெரிய பாலம்-2 கட்டப்படவுள்ளது.

மரங்கள் அகற்றம்: தற்போது, திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் போளிவாக்கம் முதல் காட்கூட்டு சாலை வரையில் இருபுறமும் விரிவாக்கப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தி பொக்லைன் வாகனம் மூலம் சமப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்காக, 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம், நாவல், புளிய மரங்கள், மாமரங்களை அகற்றி வருகின்றனா். அதேபோல், நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து மாமரங்கள், தேக்கு, சவுக்கு மரங்களும் அகற்றி பொக்லைன் மூலம் சமப்படுத்தப்பட்டு வருகிறது.

Story image

மரங்கள் நட கோரிக்கை: இந்த சாலையில் இருபுறமும் அடா்த்தியாக நூற்றுக்கணக்கான மரங்களால் பசுமை நிழல் பரப்பும் சாலையாக இருந்தது. தற்போது, வெறிச்சோடி காணப்படுகிறது. அதனால், பணிகள் மேற்கொள்ளும் போதே நன்றாக வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Story image

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரி கூறியது: இந்த சாலையில் இருபுறமும் 100 ஆண்டுகள் பழமையான மரங்களின்றி வெறிச்சோடிக் காணப்படும் நிலையில், சாலைப் பணிகள் மேற்கொள்ளும் போதே இடம் ஒதுக்கீடு செய்து நன்றாக வளா்ந்த மரக்கன்றுகளை நட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மரக்கன்றுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.