வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அதிமுக - பாஜக பிரிவு நாடகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

News image
Updated On :13 மார்ச் 2024, 10:26 pm

Sasikumar

அதிமுகவும் பாஜகவும் பிரிந்ததுபோல நாடகமாடுகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பணிகள் முடிவடைந்த அரசுத் திட்டங்களின் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

இதில் பங்கேற்று 4 மாவட்டங்களிலும் ரூ.560 கோடி மதிப்பிலான 273 திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.489 கோடி மதிப்பிலான 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.223.93 கோடி மதிப்பில் 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது: கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், நீங்கள் நலமா என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம்.

வளர்ச்சியைப் பார்த்து பொறாமை: இப்படி மக்களுக்கான திட்டங்களை உருவாக்கியதால்தான் தமிழ்நாட்டின் தொழில் வளம் உயர்கிறது, வேலைவாய்ப்பு பெருகுகிறது, பொருளாதாரம் வளர்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது.

அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு, தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில், பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது. நம் மண்ணை, தமிழை, பண்பாட்டை, வரலாற்றை, பெருமையைப் பழிப்பவர்களுக்கு நாம் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது.

அதிமுகவுக்கு சவால்: அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை அதிமுகவினரால் இப்படி பட்டியலிட முடியுமா?

மகள்களைப் பெற்ற அத்தனை பெற்றோரையும் பதறவைத்தது பொள்ளாச்சி சம்பவம். பெண்களை மிரட்டி ஆபாசப் படம் எடுத்தவர்கள் தைரியமாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள். அந்த வழக்கை சிபிஐ விசாரித்து இப்போது அது நீதிமன்றத்தில் இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை, அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடியவர்கள் மீது தாக்குதல், பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத நிலை, தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது, கஞ்சா, குட்கா மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பி.யுமே இருந்தது ஆகிய இவையெல்லாம் அதிமுக ஆட்சியில் நடந்தவை.

உத்தமர் வேஷம் போடும் கூட்டணி: குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யவிடாமல் தடுத்த கூட்டணிதான், இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகிறார்கள். இந்தக் கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்றி, பிரிந்ததுபோல நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி ஒருபக்கம் என்றால், தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றொரு பக்கம் ஜனநாயக சக்திகளும் திமுகவும் ஒற்றுமையாக நிற்கின்றன.

பழைய உத்தரவாதங்களின் நிலை என்ன?: நாட்டு மக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், "மோடியின் உத்தரவாதம்' என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த தேர்தல்களில் கொடுத்த உத்தரவாதங்களான, குடும்பத்துக்கு ரூ.15 லட்சம், இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு போன்றவற்றின் நிலை என்ன என்று பிரதமர் சொல்ல வேண்டும்.

பிரதமர் மோடி அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, தமிழ்நாட்டுக்கு பாஜக கொண்டுவரும் திட்டங்களை திமுக தடுக்கிறது என்று கூறினார். அவர் என்ன திட்டத்தைக் கொண்டு வந்தார் நாம் அதைத் தடுப்பதற்கு?.

பொய்கள் எடுபடாது: ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளிலும் தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிப் பார்க்காமல், தேர்தலுக்காக 10 நாள் வந்து பொய் சொன்னால் ஏமாறுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர்.

பொய்யும், வாட்ஸ்ஆப் கதைகளும்தான் பாஜகவின் உயிர்மூச்சு. ஆனால், இனி அந்தப் பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது.

மாநிலத்தைக் கெடுத்த அதிமுக, மாநிலத்தைக் கண்டுகொள்ளாத பாஜக என இந்த கள்ளக் கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க மக்களை அழைக்கிறேன். தமிழ்நாட்டை உயர்த்துவோம், இந்தியாவைக் காப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.