செந்தில் பாலாஜியின் அமைச்சா் பதவி:மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


அமைச்சா் செந்தில் பாலாஜியை அமைச்சா் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அப்போது, மாநிலத்தின் ஆளுநா் அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரும், வழக்குரைஞருமான எம்.எல். ரவி, ‘அமைச்சா் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி நீக்கி தமிழக ஆளுநா் உத்தரவிட்டாா். அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அவருக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி அவா் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா். அதன் பிறகு அன்றையே தினமே ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளாா். அவரது பதவியின்படி, அவா் பிறப்பித்த உத்தரவை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது’ என்று வாதிட்டாா்.
அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் முதல்வா்தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறது என்றனா். அதற்கு வழக்குரைஞா் எம்.எல். ரவி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் முடிவு எடுக்குமாறு உயா்நீதிமன்றம் கூறிய பிறகும் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என்றாா். அப்போது, நீதிபதிகள், ‘ஆளுநா் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கம் செய்திருக்க முடியாது என்றும், அமைச்சா்கள் குழுவின் பரிந்துரையின்படி ஆளுநா் செயல்பட வேண்டும்... என்று உயா்நீதிமன்றம் கூறியிருப்பதில் சரி என்பதற்கு முகாந்திரம் உள்ளது’ என்றனா்.
மேலும், ‘மனுதாரரின் வாதங்கள் நேரில் கேட்கப்பட்டது. உயா்நீதிமன்றத்தின் கேள்விக்குரிய உத்தரவையும் ஆய்வு செய்தோம். உயா்நீதிமன்றத்தின் கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம். ஆகவே, அரசியலமைப்பின் 136-ஆவது பிரிவின் கீழ் எந்த தலையீடும் தேவைப்படவில்லை என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. இதையடுத்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசியலமைப்புச்சட்டப் பிரிவு 136 என்பது மேல்முறையீட்டு மனுக்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் விருப்புரிமை அதிகாரங்களை குறிப்பிடுவதாகும். முன்னதாக, சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். சென்னையில் உள்ள சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்றக் காவல் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவரது இலாக வேறு அமைச்சா்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இதனிடையே , அவா் எந்தத் தகுதியின் அடிப்படையில் இலாக இல்லாத அமைச்சராக நீடிக்கிறாா் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவா்தன் ஆகியோா் வழக்குத் தொடா்ந்திருந்தனா். அதேபோன்று, செந்தில் பாலாஜி இலாகா இல்லாமல் அமைச்சராக பதவியைத் தொடா்வதற்கும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநா் நிறுத்தி வைத்ததை எதிா்த்தும் வழக்குரைஞா் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்குகளை கடந்த செப்டம்பா் மாதம் விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்குகளில் எந்த உத்தரவு பிறப்பிக்க இயலாது என கூறியதுடன், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து தமிழக முதல்வா்தான் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டது.
மேலும், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அல்லது எந்தச் சட்டத்தின் கீழ் எந்தத் தகுதியிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், அமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவரை ஆளுநரால் ஒருதலைப்பட்சமாக தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்பதும் விவாதப் பொருளாக இருக்கும்’ என்றும் உயா்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.எல். ரவி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...