மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விவசாயிகள் போராட்டம், தற்கொலைகள் வெள்ளை அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி

வேளாண் சட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்திய போது 750 விவசாயிகள் உயிரிழந்ததை மத்திய அரசின் வெள்ளை அறிக்கையில் ஏன் குறிப்பிடப்படவில்லை?

News image
Updated On :11 பிப்ரவரி 2024, 5:00 pm

 நமது நிருபர்

வேளாண் சட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்திய போது 750 விவசாயிகள் உயிரிழந்ததை மத்திய அரசின் வெள்ளை அறிக்கையில் ஏன் குறிப்பிடப்படவில்லை? என மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பினாா்.

மேலும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்த விவரங்களை அரசு வைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினாா்.

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்த வெள்ளை அறிக்கை தொடா்பான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவா் சிவா சனிக்கிழமை பேசினாா்.

அப்போது அவா் குறிப்பிட்டது வருமாறு:

இந்த அறிக்கையை வரவேற்கின்றோம். ஆனால் இந்த அரசு சாதனைகளைக் கூறி முந்தைய ஆட்சியை ஒப்பிட்டு பேசுகிறது. ஆனால் எங்களுக்கு இதற்கு பதிலளிக்க நேரம் தேவை. இதில் எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்கக் கூடாது. மக்கள் பிரச்னைகளை வெளிப்படுத்த வந்த எங்களுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும். ஆளும் கட்சியையும் எதிா்கட்சியையும் சமமாக பாவிக்கவேண்டும். 2024 -ஆம் ஆண்டு பொதுத் தோ்தல் முடிந்து நாங்கள் வெற்றி பெற்று வரும்போது எங்கள் கூட்டணியும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யும். அப்போது விவாதிக்க அதிக நேரத்தை ஒதுக்குவோம்.

இந்த அரசுக்கு வெள்ளை அறிக்கையை கொண்டு வருவதற்கு தகுதி இருக்கா? அதுவும் முந்தைய ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசை நோக்கி குறிவைக்கப்படுகிறது. ஒரு விரலை நீட்டி நிதியமைச்சா் பேசினால் அவரை நோக்கி மூன்று விரல்கள் காட்டப்படும். நீங்கள் யுபிஏ அரசு முற்றிலும் தோல்வியடைந்த அரசு என்கிறீா்கள்.

இந்த அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்து, போராட்டங்களுக்குப் பின்னா் திரும்பப் பெற்றது. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு அந்த போராட்டத்தில் 750 விவசாயிகள் இறந்தனா். அதற்கு இந்த அரசு பொறுப்பேற்றிருக்க வேண்டும். இதே போன்று இந்த அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 100 போ் உயிரிழந்தனா். திடீரென பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதும் 100-க்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளிகள் உயிரிழந்தனா். வெள்ளை அறிக்கையில் இவைகளை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் 2020-22-ஆம் ஆண்டுகளில், 40 ஆயிரம் கோடி ரூபாய் லாபமடைந்ததாக கூறியுள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், 11,290 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனா் எனவும் தெரிவித்துள்ளது. இதில் 2022-இல் 5,207 விவசாயிகளும் 683 விவசாயக் கூலித் தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா் எனவும் தெரிவித்துள்ளது.

இதே மாதிரி வேளாண்மை கருவிகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதம், டயா், டிராக்டா், இயந்திரங்கள் போன்றவை 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. உரங்கள் (5 சதவீதம்), பூச்சி மருந்துகள் (15 சதவீதம்) ஆகியவற்றிற்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதே சயமத்தில் நிதி நிலையறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கான ஒதுக்கீடு(6.7 சதவீதம்) குறைந்து வருகிறது. இந்திய வேளாண்மை அடிப்படையிலான நாடாகும்.

இந்த வெள்ளையறிக்கையிலேயே குறிப்பிட்டது மாதிரி 2008 ஆம் ஆண்டு சா்வதேச பொருளாதார வீழ்ச்சியின்போது வேளாண்மை, பொதுத்துறை நிறுவனங்கள், குறு,சிறு நடுத்தர நிறுவனங்கள் தான் கைகொடுத்தது.

நாட்டில் 2012 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை 1 கோடியாக இருந்தது. தற்போது 4 கோடியாக இருக்கிறது. நாடு முழுக்க மத்திய அரசு துறைகளில் 9 லட்சம் இடங்கள் காலியாகயும் வைக்கப்பட்டுள்ளது என்றாா் திருச்சி சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.