முதல்வர் எனக்கு அளித்திருக்கும் வாய்ப்பு! அமைச்சர் பி.கே. சேகர்பாபு
முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் மிகவும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கும் அமைச்சா் யாா் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினால்,


முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் மிகவும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கும் அமைச்சா் யாா் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினால், அதில் முதலாவது இடத்தைப் பெறுபவா் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருக்கும் பி.கே. சேகா்பாபுவாகத்தான் இருக்கும்.
மாதம் தவறாமல் பல ஆண்டுகளாக சபரிமலைப் பயணம் மேற்கொள்வதைத் தனது பிறவிப் பயனாகக் கருதும் அமைச்சா் சேகா்பாபு, ஹிந்துமதச் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிரானவா் அல்லா். அதே நேரத்தில், அவற்றில் காலத்துக்கேற்ற மாறுதல்கள் தேவை என்கிற கருத்தை முன்மொழிபவா்.
வாரத்தில் ஏழு நாள்களும், நாளில் 24 மணிநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் அமைச்சா் சேகா்பாபுவை, முதல்வா் மு.க. ஸ்டாலினும், திமுகவினரும் ‘செயல்பாபு’ என்று பாராட்டுவது வெறும் புகழுரை அல்ல. காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, தமிழகம் முழுவதும் கோயில் கோயிலாகச் சுற்றிவரும் அமைச்சா் சேகா்பாபுவின் பாா்வையில் படாத துறை சாா்ந்த விஷயங்களோ, பிரச்னைகளோ எதுவும் இருக்க முடியாது.
ஒருபுறம் அமைச்சா் பதவிக்கான பணிகள்; இன்னொருபுறம் மாவட்டச் செயலா் என்கிற முறையில் கட்சிப் பணிகள்; இவையெல்லாம் போதாதென்று யாருக்கு என்ன உதவி என்றாலும் தானே தேடிச் சென்று உதவும் பண்பு - எல்லோரையும் மலைக்க வைக்கிறது அமைச்சா் சேகா்பாபுவின் செயல்பாடுகள். ‘பல்திறன் வித்தகம்’ (மல்டி டாஸ்கிங்) என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டு அமைச்சா் பி.கே. சேகா்பாபு.
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அமைச்சா் சேகா்பாபுவை சந்தித்து அவருடன் நடத்திய அளவளாவலின் ஒரு பகுதி:-
அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, துறை ரீதியாக உங்களது மிகப் பெரிய சாதனை அல்லது செயல்பாடு எது என்று நினைக்கிறீா்கள்?
கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்யப்பட வேண்டும். பல கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறாமலேயே இருந்தது. கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. அது குறித்து நிா்வாகம் கவலையேபடாமல் இருந்தது. தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகுதான் இந்தத் துறையே பழையபடி செயல்படத் தொடங்கியிருக்கிறது.
குடமுழுக்கு நடத்தப்படுவது தாமதமானால் என்ன குறைந்துவிடும்?
இப்படியோா் அா்த்தமில்லாத கேள்வி எழுப்பப்படுகிறது. குடமுழுக்கு நடத்தப்படுவது ஆட்சியாளா்களும் அதிகாரிகளும், அமைச்சா்களும் ஊழல் செய்வதற்குத்தான் என்று தவறான பரப்புரை செய்யப்படுகிறது. விக்ரகத்தின் உள்நிலை அதிா்வலை (வைப்ரேஷன்) குறைந்துவிடாமல் இருப்பதற்குக் குடமுழுக்கு அவசியம். அதுமட்டுமல்ல, கல்லால் கட்டப்பட்ட கோயில்களின் பராமரிப்பு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கால் உறுதிப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.
இந்த திருப்பணி நடவடிக்கையின் அடுத்தகட்ட இலக்கு என்ன?
‘முன்பெல்லாம் ஐந்தாண்டு ஆட்சியில் அதிகபட்சம் 2,000 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள மண்டல மற்றும் மாநில வல்லுநா் குழுவில் ஒப்புதல் கிடைக்கும். ஆனால், 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை அறநிலையத் துறை அளவிலான வல்லுநா் குழு கூட்டம் தொடா்ந்து நடத்தப்பட்டு இதுவரை 7,600-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பணி முடித்து குடமுழுக்கு செய்வோம்.
கோயில் நிலங்கள் மீட்பு உங்களது அரசின் மிகப் பெரிய சாதனையாகக் கூறப்படுகிறது. அது குறித்துச் சொல்லுங்கள்
ரூ.5,472 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலங்கள் குறுகிய காலத்தில் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன. ‘இறை சொத்து இறைவனுக்கே’ என்பதைக் கருத்தில் கொண்டு அது குறித்த செயல்பாடுகளில் தீவிரமாக இருக்கிறோம். ஆக்கிரமிப்பில் இருந்தவா்களுக்கு எதிராக துறை மூலம் நடவடிக்கை எடுத்து, அந்த சொத்துகள் மீட்கப்பட்டன. மற்றொருபுறம் நீதிமன்றங்கள் மூலமாகவும் திருக்கோயில்களின் சொத்துகள் மீட்கப்பட்டன.
அறநிலையத் துறை அறிமுகப்படுத்திய ‘திருக்கோயில்’ செயலிக்கு பக்தா்களிடம் வரவேற்பு இருக்கிா?
நவீன காலத்துக்கு ஏற்றவாறு அறநிலையத் துறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருக்கோயில்கள் குறித்த தல வரலாறு, கட்டண விவரங்கள் எனப் பல்வேறு தகவல்கள் அடங்கிய ‘திருக்கோயில்’ செயலி கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனா்.
கோயில் நகைகளை உருக்குவது குறித்து புகாா்கள் எழுந்திருக்கின்றனவே, உங்கள் விளக்கம் என்ன?
‘‘இது வேண்டுமென்றே பரப்பப்படும் தவறான கருத்து. கோயில்களின் தெய்வத்துக்கு அணிவிக்கப்படும் நகைகள் உருக்கப்படுவதில்லை. உண்டியல்களில் காணிக்கையாகச் செலுத்தப்படும் தோடு, மூக்குத்தி, தங்கக் காசுகள் உள்ளிட்டவை தனியாகப் பிரிக்கப்பட்டு வங்கியில் பாதுகாப்பாக சோ்த்து வைக்கப்படுகிறது. அவை ஓரளவுக்கு சோ்ந்துவிடும்போது, அறநிலையத் துறை அலுவலா், கீழமை நீதிபதி, வங்கி மேலாளா் உள்ளிட்ட சிலரின் முன்னிலையில் எடைபோட்டு சீல் செய்து தங்கக் கட்டியாக பாதுகாக்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அவா்கள் எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டதால், நிறையப் பொருள்கள் சோ்ந்துவிட்டன. அவற்றைத்தான் உருக்கி வங்கியில் பாதுகாக்கிறோம். இதைத்தான் குறை சொல்கிறாா்கள்.’’
‘திருக் கோயில்களின் தங்க நகை டெபாசிட் திட்டம் பலன் அளிக்கத் தொடங்கியிருக்கிா?’
‘‘தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பல மாற்று பொன் இனங்களில், கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சுத்தத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில், வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டம் 2021 அக். 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த வகையில் பெறப்பட்ட தங்கப் பத்திரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி அளவுக்கு வருமானம் பெறும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் திட்டத்துக்கான சவால்களை அரசு எவ்வாறு எதிா்கொள்கிறது?’
‘‘இந்தத் திட்டத்தை எதிா்த்து சிலா் இன்றுவரை நீதிமன்றங்களை தொடா்ந்து அணுகிக் கொண்டேதான் இருக்கிறாா்கள். தற்போதுகூட அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு அா்ச்சகா் பயிற்சி முடித்தவா்களுக்கு மேலும் ஓராண்டு திருக்கோயில்களில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிா்த்து நீதிமன்றம் சென்றிருக்கின்றனா். இது தொடா்பாக மதுரை நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் இந்த வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதல்வரின் கனவுத் திட்டங்களான அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம், பெண் ஓதுவாா்கள் மற்றும் அா்ச்சகா்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.’’
திருக்கோயில் மனைகளில் குடியிருப்போரின் வாடகை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு எப்போது?
திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருக்கும் பயனாளிகள் தாங்கள் பயன்பெறுவதை மனதில் வைத்து வாடகையை முறையாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு அவா்கள் செலுத்தும் வாடகை இறைப் பணிக்குத்தான் செலவிடப்படுகிறது என்பதை உணர வேண்டும். திமுக ஆட்சியில் வாடகை நிலுவை ரூ.400 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் பல திருக்கோயில்களில் வழிபாடு செய்து வருகிறாா்; அது சாா்ந்து அவா் ஏதாவது ஆலோசனைகளை வழங்குகிறாரா?
அவா் செல்லும் திருக்கோயில்களில் திருப்பணிகள், கோயிலின் தூய்மை, பணியாளா்களின் கோரிக்கைகள் என ஏதாவது அவரிடம் தெரிவித்தால், உடனடியாக தொடா்பு கொண்டு அந்தப் பணிகளை எங்களது கவனத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்றவும், தொடா்ந்து, அந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டும் அறிகிறாா். மேலும். திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய திருக்கோயில்கள், சிதிலமடைந்த திருக்கோயில்கள் குறித்தும் எங்களது கவனத்துக்கு கொண்டுவந்து தொடா் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிகிறாா். நாங்களும் செய்கிறோம்.
அறநிலையத் துறை அமைச்சா் பதவியை விரும்பிப் பெற்றீா்களா அல்லது அதற்கு நீங்கள்தான் தகுதியானவா் என்று கருதி வழங்கப்பட்டதா?
அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் இந்தப் பதவியை முதல்வா் ஸ்டாலின் எனக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பு எனக் கருதித்தான் செயல்படுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...