/

அணைகளின் மதகுகள் ஆய்வுக்கு உள்படுத்தப்படுமா?

தமிழ்நாட்டில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மதகுகளின் உறுதித் தன்மை ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக் குரல் உரக்க ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

எஸ்.கே ரவி

தமிழ்நாட்டில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மதகுகளின் உறுதித் தன்மை ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக் குரல் உரக்க ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

தென்பெண்ணை ஆறு, தென்னிந்தியாவில் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையிலிருந்து (நந்தி துர்க்கம்) தொடங்கி, தமிழ்நாட்டில் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது வற்றாத ஜீவநதி ஆகும். 

கர்நாடக மாநிலத்தில் 112 கி.மீ, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 180 கி.மீ., திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 34 கி.மீ., விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 106 கி.மீ. என மொத்தம் 430 கி.மீ. தூரம் பாய்கிறது தென்பெண்ணை ஆறு. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ. ஆகும். கெடிலம், பாம்பாறு, மார்கண்டயன் நதி, வன்னியாறு, கல்லாறு ஆகியவை இதன் துணையாறுகள் ஆகும். 

அணைகள்: தமிழ்நாட்டில் பாயும் இந்த ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம், கிருஷ்ணகிரி அணை, ஆங்கிலேயரால் கட்டப்பட்ட நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. 

பாசன வசதி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையின் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும், கிருஷ்ணகிரி அணையின் மூலம் 9,012 ஏக்கர் பரப்பளவும், சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு என மொத்தம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பெரும்பாலும், விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று போகம் சாகுபடி செய்கின்றனர். 

மேலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூர் ஏரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணைக்கும் நீர் நிரப்பப்படுகிறது. மேலும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டு நீர் நிரப்பப்படுகிறது. 

குடிநீர் வசதி: தென்பெண்ணை ஆற்றிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 குடிநீர்த் திட்டங்கள் மூலம் 669 கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் 9 மில்லியன் லிட்டர் குடிநீர் இந்த கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

மாசு அடைந்த ஆற்று நீர்: இத்தகைய நிலையில், மக்கள் தொகை பெருக்கம், நகரங்களின் விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சியின் ஒரு பகுதியான தொழிற்சாலைகளின் பெருக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தென்பெண்ணை ஆற்றின் நீர் நாளுக்கு நாள் மாசு அடைவது அதிகரித்து வருகிறது. நகரங்களில் இருந்து வெறியேற்றப்படும் கழிவு நீர், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத நீர் போன்றவை ஆற்று நீரில் கலப்பதால் ஆறு மாசு அடைவதாக புகார் எழுந்துள்ளது. 

பாதிக்கப்படும் மதகுகள்: ஜீவ நதியான தென்பெண்ணை ஆற்றில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும். இந்த மாசு அடைந்த நீரால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணையின் 7 மதகுகள், கிருஷ்ணகிரி அணையின் 8 மதகுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் கோடை காலத்தில் வறண்டு காணப்படும். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்த இரண்டு அணைகளிலும் நீர் ஆண்டு முழுவதும் தேங்கி இருக்கும். கடந்த 15 ஆண்டுகளாக இந்த இரு அணைகளின் மதகுகள் நீரில் முழ்கியே இருக்கிறது. ஆற்றின் நீர் மாசு அடைவது அதிகரித்து வருவதால், இந்த மதகுகளின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. 

மதகு சேதம்: இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகளில் முதல் எண் கொண்ட மதகு கடந்த ஆண்டு, நவம்பர் 29-ஆம் தேதி சேதமடைந்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணையில் தொடர்ந்து 100 நாள்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த 52 அடி தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல், தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த மாசு நீர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகளில் நிரப்பப்பட்டன. 

அதிக அமிலத் தன்மை: இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி அணையின் மதகு சேதமடைவதற்கான காரணத்தை விஞ்ஞானிகள், நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அணையில் பல்வேறு இடங்களில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை பரிசோதனை செய்ததில் அமிலத் தன்மை அதிகமாக இருந்ததும், குறிப்பாக மதகுகளின் அருகே தேங்கி இருக்கும் நீரில் அமிலத் தன்மை இரண்டரை மடங்கு அதிகமாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும், மதகு சேதமடைய அமிலத் தன்மையே காரணம் என தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

உலக வங்கி: இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி அணையிலிருந்து சேதமடைந்த மதகு அப்புறப்படுத்தப்பட்டு, தற்காலிகமாக மதகு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் 52 அடியிலிருந்து 44 அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய மதகு அமைக்க உலக வங்கியிடம் கடன் பெற தமிழக அரசு முயன்றது. அப்போது, தென்பெண்ணை ஆற்று நீரில் அமிலத் தன்மை அதிகமாக இருப்பதால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி, சாத்தனூர் உள்ளிட்ட அணைகளின் மதகுகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உலக வங்கி அறிவுறுத்தியதாகவும், ஆனால், இதுவரை மதகுகளின் உறுதித் தன்மை ஆய்வுக்கு உள்படுத்தப்படவில்லை. 

மேலும், அணையின் நீர் தேக்கும் அளவு 44 அடியாகக் குறைக்கப்பட்டுள்ளதால், அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு 1,660 மில்லியன் கன அடியிலிருந்து 880 மில்லியன் கன அடியாகக் குறைந்துள்ளது என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவுத் தலைவர் எஸ்.ராமநாதன் தெரிவித்தார். 

விவசாயிகள் வேதனை: கோடை காலம் என்பதால் அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இந்த நிûயில், மதகுகளை விரைந்து ஆய்வு செய்து, அதன் உறுதித் தன்மையை உறுதிப்படுத்திய பிறகே புதிய மதகு அமைக்கும் நிலை உள்ளது. இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி, உறுதியான மதகை அமைக்கவும், அணையைத் தூர் வாருவது, இனி வரும் காலங்களில் மதகுகள் சேதம் அடைதல் போன்ற காரணங்களால் விவசாயிகள் பாதிக்காத வகையிலான நடவடிக்கைகளில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 
தற்போது, கிருஷ்ணகிரி அணையின் நீர் அளவு குறைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம கவுண்டர் கேட்டுக் கொண்டார். 


வல்லுநர்கள் கருத்து: அணை மதகுகளைஅமைக்கும் போது, தகடுகளை வெல்டிங் வைப்பதற்கு பதிலாக போல்ட், நட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தகடுகள் எளிதில் துருப் பிடிக்காமல் இருக்க நீரின் அமிலத் தன்மைக்கு ஏற்ப தரமான ரசாயனப் பூச்சுகளைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மதகுகள் எளிதில் சேதமடைவதைத் தடுக்கலாம். இதனால், விவசாயிகளுக்கு உதவும் அரசின் நோக்கம் நிறைவேறும் என வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 

எனவே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மதகுகளை விரைந்து ஆய்வு செய்து, அவற்றின் உறுதித் தன்மையை அறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.