/

சத்துணவுப் பொருள் நிறுவன சோதனையில் புதிய தகவல்.. சோதனையை நீட்டிக்கும் அதிகாரிகள்

சத்துணவுப் பொருள் நிறுவனத்தில் நடைபெற்று வரும் சோதனை புதிய கோணத்தை அடைந்ததை அடுத்து சோதனையை 3-ஆவது நாளாக நீட்டிப்பதாக வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:09 pm

ENS

அரசு சத்துணவு திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை விநியோகம் செய்யும் நிறுவனத்தில் இரு தினங்களாக நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனை 3-ஆவது நாளும் நீடிக்கும் என்று வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் தனியார் சத்து மாவு நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை விநியோகித்து வருகிறது. 

இதுபோல், சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவையும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகித்து வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தினர் வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து சுமார் 40 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த விசாரணை வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக நீடிக்கிறது.

இதுகுறித்து, வருமான வரித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

"இந்த சோதனை 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடிக்கும். இந்த சோதனையில் நல்ல துப்பு கிடைத்துள்ளது. ஒரு சில இடங்களில் சோதனைகளை நிறுத்திவிட்டோம். அதேசமயம் ஒரு சில புதிய இடங்களில் சோதனையை தொடங்கியுள்ளோம். இந்த சோதனை தொடங்கியதில் இருந்து, இந்த விவகாரம் தற்போது ஒரு புதிய கோணத்தை அடைந்துள்ளது" என்றார். 

இந்த சோதனையில் போது 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்ற செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.  

இதற்கிடையில், இந்த நிறுவனத்தின் ஆலையில் காசாளராக இருக்கும் கார்த்திகேயன் விசாரனைக்கு பயந்து முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். தனக்கு மயக்கம் வருவதாக பொய் கூறி அவர் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதையடுத்து, முதுகு பகுதியில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.