பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆட்சி மொழி திட்ட செயலாக்க சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஆங்கில மோகத்திற்கு மாற்றாக தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆட்சிமொழி திட்ட செயலாக்க சட்டத்தினை தீவிரமாக அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:31 pm

ஆ. நங்கையார் மணி

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஆங்கில மோகத்திற்கு மாற்றாக தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆட்சிமொழி திட்ட செயலாக்க சட்டத்தினை தீவிரமாக அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்சி மொழி திட்ட செயலாக்க சட்டத்தின்படி அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் முத்திரை, பெயர் பலகை, காலமுறை சுற்றறிக்கை, ஆணைகள், அழைப்பிதழ், அறிவிக்கை கோப்பு, சம்பள பட்டியல் உள்ளிட்ட அனைத்தும் தமிழ்மொழியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான அரசாணையில், அறிவிப்பு, அறிவிக்கை, ஏல விளம்பரம், இதர விளம்பரங்கள் வெளியிடும் போது, அலுவலர்களின் பெயருக்கு முன் உள்ள முதல் எழுத்திற்கு ஆங்கிலத்தை பயன்படுத்தாமல், சரியான தமிழ் எழுத்தினை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு சுமார் 38 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், அவை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
ஆட்சிமொழி உத்தரவுகளை செயல்படுத்துவதற்காக கடந்த 2009 முதல் அரசு அலுவலர்களுக்கு பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் அரசு அதிகாரிகள் தயார் செய்யும் கோப்புகள், அதில் இடம் பெறும் கையொப்பம், முதல் எழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும், பெரும்பாலான அலுவலகங்களில் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் நகராட்சி, மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் அரசு வாகனங்களில், பதவி மற்றும் பெயர்கள் ஆங்கிலத்திலேயே இடம் பெற்றுள்ளன.
ஆட்சிமொழி திட்ட செயலாக்க சட்டத்தினை மீறும் அலுவலர்களுக்கு, ஆய்வு நடத்தும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் குறிப்பாணை மட்டும் வழங்குகின்றனர். அபராதம் விதித்தல் போன்ற நடைமுறைகள் இல்லாததால், அந்த குறிப்பாணைகள் செயலற்ற நிலையில் உள்ளன.
இதுகுறித்து சிறுவர் நாவலுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற மா.கமலவேலன் கூறுகையில்: மொழியுணர்வு இல்லாத நிலையில், ஆட்சி மொழி சட்டம் என்பது கோப்புகளில் மட்டுமே உள்ளது. தாய்மொழியை படிக்காமல் ஒருவரால் முனைவர் பட்டம் பெற முடியும் என்றால் அது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். கேரளத்தில் 10ஆம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், அதில் தாய்மொழியான தமிழுக்கும் முக்கியத்தும் அளிக்க வேண்டும்.
பொதுமக்களின் நலனுக்காக பண விடை அஞ்சல் (மணிஆர்டர் படிவம்) படிவத்தில் தமிழை இடம் பெறச் செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தற்போது தமிழ் நீக்கப்பட்டு விட்டது. அதற்கு பொதுமக்கள் தரப்பிலோ, அரசுத் தரப்பிலோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள், பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பலகைகளிலும் தமிழை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். ஆட்சி மொழி சட்டத்தை மீறும் அரசு அலுவலர்களுக்கு அபராதம் வசூலிக்கவும் வழி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ஆட்சி சொல்லகராதி கையேடு

நிர்வாக நடைமுறையில் ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அப்போதைய சென்னை மாநில அரசால், கடந்த 1957ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி சொல்லகராதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்புச் சொல் துணை அகராதி, தமிழ் சுருக்கெழுத்து நூல், மாதிரி வரைவுகள், ஆட்சித் தமிழ் ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
2000 ஆம் ஆண்டில் வெளியான 6ஆம் பதிப்பில் வெளியான சொற்கள் தமிழறிஞர் குழுவால் சீராய்வு செய்து, புதிய சொற்களை இணைத்து கடந்த 2014-இல் 7ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது. 597 பக்கங்கள் கொண்ட ஆட்சி சொல்லகராதி கையேட்டினை பெரும்பாலான அதிகாரிகள் பயன்படுத்துவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.