பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பராமரிப்பில்லாத ராணுவ வீரர்கள் நினைவுச் சின்னம்

வங்க விடுதலைப் போரில் தன்னுயிர் ஈந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்காக செங்கல்பட்டு நகரில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் பராமரிப்பின்றி கேட்பாரற்ற நிலையில் உள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:27 am

செங்கை பி. அமுதா

வங்க விடுதலைப் போரில் தன்னுயிர் ஈந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்காக செங்கல்பட்டு நகரில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் பராமரிப்பின்றி கேட்பாரற்ற நிலையில் உள்ளது.

1971-இல் வங்க விடுதலைக்காக நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டு உயிர் நீத்த செங்கல்பட்டு மாவட்ட போர்வீரர்களுக்கான நினைவுச் சின்னம் நிறுவுவதற்கு செங்கல்பட்டு நகராட்சிக்குள்பட்ட செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையும், காஞ்சிபுரம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

7-1-1972-இல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. செங்கை மாவட்ட நலக் குழு சார்பில் நிறுவப்பட்ட போர் வீரர் நினைவுச் சின்னத்தை 27-03-1974-இல் அப்போதைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா திறந்து வைத்தார்.

அதனையடுத்து செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி, தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர், இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம், போர் வீரர் நினைவு தினத்தின் போதும், நினைவுச் சினனத்தை சுத்தப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் முறையானப் பராமரிப்பின்றி நினைவுச் சின்னம் சேதமடைந்தும் அப்பகுதியில் புதர் மண்டியும் கிடந்தது.

செங்கல்பட்டு நகராட்சி அனுமதியின் பேரில் செங்கல்பட்டு கனரா வங்கி கிளை சார்பில் போர் வீரர் நினைவுச் சின்னம் புதுப்பிக்கப்பட்டு அந்தப் பகுதியில் பூங்காவும் அமைக்கப்பட்டது.

28-02-2009-இல் புதுப்பிக்கப்பட்ட போர் வீரர் நினைவுச் சின்னம் அப்போதைய நகர்மன்றத் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது.

சில மாதங்கள் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன.

அதன்பிறகு இன்று வரை போர்வீரர் நினைவுச் சின்னத்தைச் சுற்றி குப்பைகளும் தேவையற்ற செடிகளும் வளர்ந்து புதர் மண்டிய நிலை உள்ளது.

பிச்சைக்காரர்களின் தங்குமிடமாகவும், சமூகவிரோதிகளின் இரவு நேர கூடாரமாகவும் மாறியதால் நினைவுச் சின்னத்தைச் சுற்றி கிழிந்த துணிகளும், காலி மதுபாட்டில்களும், செருப்புகளும் உள்ளது மனதை உருக்குவதோடு தியாகச் செம்மல்களை இழிவுப்படுத்துவதாகவும் உள்ளது.

மேலும் கழிவு நீர் கால்வாய் அடைப்பட்டுள்ளதை சரி செய்யும் பணிக்காக நினைவுச் சின்னத்தின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் நகராட்சியால் உடைக்கப்பட்டு சரிசெய்யப்படாமல் விடப்பட்டதால் கழிவுநீர் மட்டும் அருவிபோல் துர்நாற்றத்துடன் ஓடுகிறது. இதனால் நினைவுச்சின்னம் மேலும் கலையிழந்து காணப்படுகிறது.

அரசியல்வாதிகள் தங்கள் கட்சித் தலைவர்கள் உருவச் சிலையை நகரின் முக்கிய பகுதிகளில் நிறுவி பராமரித்து வருகின்றனர்.

ஆனால் தேச மக்கள் நன்மைக்காகவும், நாட்டின் பெருமையை நிலைநாட்டவும் தங்கள் இன்னுயிர் அளித்த போர் வீரர்களுக்கான நினைவுச் சின்னம் பொதுமக்கள் பார்வையில் படும்படி இல்லாமல் எங்கோ ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த பகுதி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் நகராட்சிக்கும் தோன்றவில்லை, சமூக நல அமைப்புகளுக்கும் தோன்றவில்லை.

அந்த வழியாகவே அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் சென்று வருகின்றனர். ஆனால் இந்த அவலநிலை யார் கண்ணுக்கும் தென்வில்லைபோலும்.

கல்லூரிகள், பள்ளிகளில் உள்ள நாட்டு நலப் பணி மாணவர்களோ, சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளோ, இந்திய சுதந்திர தினத்துக்கு முன்பாக போர் வீரர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.