கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கடும் வறட்சி: எள் உற்பத்தி வரலாறு காணாத சரிவு

கடும் வறட்சி காரணமாக எள் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:16 am

ஜெபலின்ஜான்

கடும் வறட்சி காரணமாக எள் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை எள் சாகுபடி செய்யப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாக எள் சாகுபடி நடக்கிறது. கீழ்பவானி பாசனப் பகுதிகளான ஈரோடு மாவட்டத்தில் கோபி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் பகுதிகளிலும், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியிலும் பரவலாக எள் பயிரிடப்படுகிறது.

மாநிலத்திலேயே மிகப்பெரிய எள் சந்தை ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செயல்படுகிறது. அவல்பூந்துறை, திருப்பூர் மாவட்டம் முத்தூர் எள் சந்தைகளுக்கும் அதிகளவில் எள் வரத்து உள்ளது. இச் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின்கீழ் இயங்கி வருகின்றன. இச் சந்தைகளுக்கு திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் எள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

வாரந்தோறும் திங்கள்கிழமையன்று கொடுமுடியிலும், செவ்வாய்க்கிழமை அவல்பூந்துறையிலும், வெள்ளிக்கிழமை சிவகிரியிலும், சனிக்கிழமை முத்தூரிலும் எள் சந்தை நடைபெறுகிறது.

இச் சந்தைகளுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை எள் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு சீசன் தொடங்கிய 2 வாரங்களுக்குள் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது.

சிவகிரி சந்தைக்கு சீசன் நேரத்தில் தினமும் 10,000 மூட்டைகளும், அவல்பூந்துறை சந்தைக்கு 2,000 மூட்டைகளும் வரத்து இருக்கும். ஆனால், இந்த ஆண்டில் சிவகிரிக்கு 2,000 மூட்டைகளும், அவல்பூந்துறைக்கு 500 மூட்டைகளும்தான் வரத்து உள்ளது. வறட்சி காரணமாக எள் பயிர்கள் காய்ந்துவிட்டதால் வரத்து குறைந்துவிட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவல்பூந்துறை எள் சந்தைக்கு வந்த ஈரோடு மாவட்டம், சாமிகவுண்டன்வலசைச் சேர்ந்த விவசாயி மோகனசாமி கூறியது:

எள் 100 நாள் பயிர் என்பதால், இதைப் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஓர் ஏக்கர் எள் பயிரிட ரூ.14,000 செலவாகிறது. எனது தோட்டத்தில் இந்த ஆண்டு 2 ஏக்கரில் பயிரிட்டிருந்தேன். ஆனால், அரை ஏக்கரில் மட்டுமே எள் விளைச்சல் இருந்தது. மற்றவை வறட்சியால் காய்ந்துவிட்டன என்றார்.

பூமாண்டம்வலசைச் சேர்ந்த விவசாயி ஜி.குணசேகரன் கூறியது:

ஒரு ஏக்கரில் 500 கிலோ எள் விளையும். எனது தோட்டத்தில் 1.5 ஏக்கரில் எள் பயிரிட்டதில் 75 கிலோ மட்டும்தான் கிடைத்துள்ளது. கடும் வறட்சி காரணமாக எள் பயிர்கள் கருகிவிட்டன. தஞ்சை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியதுபோல கொங்கு மண்டல விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியது:

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள கீழ்பவானி பாசனப் பகுதிகளில் சுமார் 30,000 ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் சுமார் 6,000 முதல் 7,000 ஏக்கர் வரை மட்டும்தான் எள் பயிரைக் காப்பாற்ற முடிந்தது. பிற இடங்களில் உள்ள எள் பயிர்கள் கருகிவிட்டன. எள் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, கடும் வறட்சி காரணமாக எள் மட்டுமின்றி அனைத்துப் பயிர்களும் காய்ந்து வருகின்றன. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து அரசுக்கு ஏற்கெனவே கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவுப்படி அமைச்சர் குழுவினரும் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு செய்து சென்றுள்ளனர். இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் என்றார்.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் வறட்சி ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் எள் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. எள் விவசாயிகளின் இழப்பை ஈடுகட்ட வேளாண் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.