பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புறக்கணிக்கப்படும் கீழ்நிலை அதிகாரிகள்! காவல்துறையில் பாரபட்சம்

சென்னை, ஏப். 22: தமிழக காவல்துறையில் பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் நிலவுவதாக காவல்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  1976 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:38 pm

கே.வாசுதேவன்

சென்னை, ஏப். 22: தமிழக காவல்துறையில் பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் நிலவுவதாக காவல்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

 1976 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் அரசு தேவையற்ற காலதாமதம் செய்து வருவதாக பாதிக்கப்பட்ட அதிகாரிகள் புகார் கூறுகின்றனர்.

 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும்,குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதிலும் மேல்நிலை அதிகாரிகளை காட்டிலும், கீழ் நிலை அதிகாரிகளுக்கு அதிகளவு பங்கு உண்டு. ஆனால், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற புகார் பல ஆண்டுகளாக உண்டு. பதவி உயர்வு, பணி பலன்கள் பெறுவதில் மேல்நிலை அதிகாரிகளைக் காட்டிலும், கீழ்நிலை அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டே வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

 காவல்துறைக்கு வழக்கமாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் 1976 மற்றும் 1979ம் ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1976ல் 230 சப்-இன்ஸ்பெக்டர்களும், 1979ல் சுமார் 155 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

 இதன் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர்களின் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. அதாவது காவலர் பயிற்சி கல்லூரி நடத்திய பணிமூப்பு தேர்வு மூலம் பதவி உயர்வு வழங்குவதா அல்லது அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பணிமூப்பு தேர்வு மூலம் பதவி உயர்வு வழங்குவதா என்ற சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இறுதியில் காவலர் பயிற்சிக் கல்லூரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிமூப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக பதவி உயர்வு வழங்குவதில் சில ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

 1976-ல் பணிக்கு சேர்ந்தவர்கள் இப்போது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணிபுரிய வேண்டும். ஆனால் 4 பேர் மட்டுமே முறையாக பதவி உயர்வு பெற்று கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்கள். எஞ்சியவர்களில் 14 பேர் இப்போது பதவி உயர்வு பெற முடியாமல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக (ஏ.டி.எஸ்.பி.) வேலை செய்கின்றனர். மீதி இருப்பவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களில் ஒரு சிலரை தவிர்த்து மீதி அனைவரும் காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றார்கள் என்று வேதனையுடன் கூறினார் கோவை மண்டலத்தைச் சேர்ந்த ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.

 இப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் 14 பேரும், தங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வைக் கேட்டுக் கடந்த 2 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஆனால், காவல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் 22 காலியாக இருந்தும் அரசு இன்னும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருக்கிறது. இதனால், அந்த அதிகாரிகளுக்கு பெரும் மனச்சோர்வும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

 பாரபட்ச நடவடிக்கை: இதேபோல 1979-ல் பணிக்கு சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் இப்போது துணை காவல் கண்காணிப்பாளர்களாக (டி.எஸ்.பி.) இருக்கின்றனர். இவர்களுக்கும் 2 ஆண்டுகளாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இவர்களில் 55 பேர் இந்தாண்டு ஓய்வு பெறுகிறார்கள். அடுத்தாண்டு 80 பேர் ஓய்வு பெறுகிறார்கள். மாநிலம் முழுவதும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவிகளில் 60 பணியிடங்கள் காலியாக இருந்தும், இவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பது காவல்துறையின் பாரபட்ச நடவடிக்கையையே காட்டுவதாக துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

 "கடந்த 1976 ல் பணிக்கு சேர்ந்த நான், சுமார் 36 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணிக்குச் சேர்ந்தவர்கள் பெரும்பாலோனார் ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது 14 பேர் மட்டுமே பணியில் இருக்கிறோம். இந்தாண்டு ஆகஸ்ட் மாத்ததுக்குள் அனைவரும் ஓய்வு பெற்றுவிடுவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும்.

 ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, இனியாவது எங்களுக்கு விடிவு பிறக்கும் என்று காத்திருந்தும் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் நாங்கள் தேவையற்ற மன உளைச்சலுடன் பணியில் இருக்கிறோம்.

 போதாதக்குறைக்கு, இப்போது கடந்த 2004ல் குரூப் 1 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுடன் பதவி உயர்வு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 இந்த அறிவிப்பினால், எங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது' என்று பாதிக்கப்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

 மிகப்பெரிய இழப்பு: மற்றொரு அதிகாரி இது குறித்து கூறும்போது, 'ஊரில் ஏற்படுகின்ற பிரச்னைகள் அனைத்தையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம். ஆனால், எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. இந்த பதவி உயர்வு கிடைக்காதால் பணியின்போது புறக்கணிக்கப்படுவதோடு, ஓய்வு பெற்ற பின்னரும் பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்படுவோம். குறிப்பாக ஓய்வூதிய பலன்கள் குறைவாக கிடைக்கும், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் கிடைக்காது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 முதல்வரின் கையில்: இப் பிரச்னையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான முடிவு எடுக்கும் அதிகாரம் உள்துறையின் கையில் இருப்பதால், தமிழக முதல்வர் நினைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால், இப் பிரச்னையை இதுவரை முதல்வரின் கவனத்துக்குக் கூட அதிகாரிகள் எடுத்துச் செல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இனியாவது இந்த பிரச்னை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அனைவருக்கும் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது.

 

 நெருங்கும் ஓய்வுகாலம்

 * கடந்த 1976ல் பணிக்கு சேர்ந்த 250 பேர்களில், இப்போது பணியில் இருக்கும் 14 ஏ.டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு இல்லாமல் இருக்கின்றனர்.

 * இந்த 14 பேரும் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பணி ஓய்வு பெறுகிறார்கள்.

 * மாநிலம் முழுவதும் 22 காவல் கண்காணிப்பாளர்கள் காலியாக இருந்தும், பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது.

 * ஏற்கனவே பணி ஓய்வு பெற்றவர்களில் ஒரு சிலரை தவிர்த்து, பெரும்பாலானோர் பதவி உயர்வு இல்லாமல் ஓய்வு பெற்றுள்ளனர்.

 * 1979 ல் பணிக்கு சேர்ந்தவர்களில் பதவி உயர்வு இல்லாமல் 135 பேர் டி.எஸ்.பி.களாக உள்ளனர்.

 * இவர்களில் 55 பேர் இந்தாண்டு ஓய்வு பெறுகிறார்கள். 80 பேர் அடுத்தாண்டு ஓய்வு பெறுகிறார்கள்.

 * மாநிலம் முழுவதும் 60 ஏ.டி.எஸ்.பி. பணியிடங்கள் காலியாக இருந்தும், பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கின்றனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.