பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கட்டண நிர்ணயம்: 1,200 பள்ளிகள் மேல்முறையீடு

சென்னை, மே 20: தனியார் பள்ளிக் கல்விக் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் அதிருப்தி தெரிவித்து 1,200 தனியார் பள்ளிகள் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறைய

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:58 pm

ஆர். ஆதித்தன்

சென்னை, மே 20: தனியார் பள்ளிக் கல்விக் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் அதிருப்தி தெரிவித்து 1,200 தனியார் பள்ளிகள் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளன.

கட்டண நிர்ணயம் தொடர்பான விவரம் கிடைத்த 15 நாள்களுக்குள், குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம் என்பதால், இந்த எண்ணிக்கை மேலும் கூடும் எனத் தெரிகிறது.

தனியார் பள்ளிகளின் முறையற்ற கட்டண வசூலைத் தடுக்க தனியார் பள்ளிக் கல்வி கட்டண முறைப்படுத்தும் சட்டத்தை, தமிழக அரசு கொண்டு வந்தது. மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழுவை அமைத்தும் அரசு உத்தரவிட்டது.

இக்குழுவினர் பள்ளிகளின் அமைவிடம், உள்கட்டமைப்பு, கல்விக் கட்டணம், ஆய்வக வசதி, ஆசிரியர்-மாணவர் விகிதம், விளையாட்டு மைதான வசதிகள் குறித்து மொத்தம் உள்ள 10,934 பள்ளிகளுக்கு விண்ணப்பப் படிவ விவரங்களை அளித்தனர். இதில் 10,233 பள்ளிகள் தகவல்களைச் சமர்ப்பித்தன. மீதியுள்ள 701 பள்ளிகள், குழுவிடம் தங்களின் பள்ளிகளின் விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. கால அவகாசம் அறிவிக்கப்பட்டும், அந்தப் பள்ளிகள் இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை.

மேற்கண்ட அனைத்து பள்ளிகளுக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

இதில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11,000 எனவும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.8,000 எனவும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.5,000 எனவும், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.3,500 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல தனியார் பள்ளி சங்கங்கள், கட்டண நிர்ணயம் மிகவும் குறைவாக உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தன. பள்ளிகளை திறக்க மாட்டோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன.

இதுபோன்ற மிரட்டல்களுக்கு அரசு அடிபணியாது என பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்தார்.

இந்தக் கட்டண முறையை ஏற்காத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தலாம் என கல்வியாளர்கள் யோசனை தெரிவித்தனர்.

பின்னர், குறைவான கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவிடம் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என மற்றொரு அறிவிப்பை தனியார் பள்ளி அமைப்புகள் வெளியிட்டன.

அதைத்தொடர்ந்து, வழக்கம் போல ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்போம் என்று திடீரென இன்னொரு அறிவிப்பை வெளியிட்டன.

இந்நிலையில், இதுவரை 1,200 தனியார் பள்ளிகள், நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டண விவரம் இணையதளத்தில் எப்போது? கட்டண நிர்ணய விவரம் தொடர்பான தகவல்கள் பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் w‌w‌w.‌pa‌l‌l‌i‌k a‌l‌v‌i.‌i‌n என்ற பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

இன்னும் ஓரிரு நாளில் இணையதளத்தில் கட்டண நிர்ணயம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேல்முறையீடு செய்யும் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை, நீதிபதி கோவிந்தராஜன் மறுஆய்வு செய்து புதிய கட்டண விவரத்தை அறிவிப்பார். இதுதொடர்பான விவரமும் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.