மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பில் தொய்வு நிலை
சென்னை, மே 4: அரசு தேர்வுத்துறையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததால், சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று அல்லது


சென்னை, மே 4: அரசு தேர்வுத்துறையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததால், சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்கூட முழுமையாக விடுப்பு வசதிகளைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஓராண்டுக்கு சராசரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து தருமாறு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வருவதாகவும், சில சமயங்களில் ஓராண்டுக்கு மேல் சான்றிதழ்களை சரிபார்க்க முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
போலிச் சான்றிதழ்கள் மூலம் மோசடி செய்து வேலையில் சேரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இம்மாதிரியான மோசடிகளை தடுக்கும் வகையில், மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்து தரும் பணியை அரசுத் தேர்வுத்துறை செய்து வருகிறது.
அதன்படி பிளஸ் 2 முடித்துவிட்டு தொழிற்கல்வியான மருத்துவம், பொறியியல் படிப்பில் சேருவோரின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கு, அந்தந்தக் கல்லூரிகள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் துறைக்கு விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றன.
ராணுவம், மத்திய-மாநில அரசுகள்: இதுபோல உயர்கல்விக்கு வெளிநாடு செல்லும் மாணவர்களின் சான்றிதழ்களும் இங்கு சரிபார்க்கப்பட்டு வருகின்றன. மேலும் ராணுவம், மத்திய-மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் என பல துறைகளில் இருந்தும் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கு விண்ணப்பங்கள் வருகின்றன.
பல்கலைக்கழங்களும் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் சான்றிதழ்களும், உண்மைத்தன்மையை அறிவதற்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இம்மாதிரி சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் ஓராண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருவதாகவும், அரசு தேர்வுத்துறையில் நிலவும் ஆள்பற்றாக்குறையால் சான்றிதழ்களை உடனே சரிபார்த்து தர முடியவில்லை என்றும் அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைப்பது, பெயர் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்தல், தேர்வு முடிவுகளின் போது பல முக்கிய பணிகளையும் அரசுத் தேர்வுத்துறை செய்து வருகிறது.
2010-ம் ஆண்டு மட்டும் பிளஸ் 2 தேர்வை சுமார் 7.50 லட்சம் பேரும், 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை சுமார் 10 லட்சம் பேரும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மட்டும் 5 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. கல்லூரி படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மட்டும் ஓராண்டுக்கு மேல் ஆகிறது.
இதில் வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடு செல்பவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் 10 நாள் முதல் ஒரு மாதத்துக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு செய்து தரப்படுகிறது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
100 காலிப் பணியிடங்கள்: ஆனால் இளநிலை உதவியாளர் சுமார் 50 பேர், உதவியாளர்கள் 64 பேர் என 100-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. சான்றிதழ்களை சரிபார்க்க மட்டும் ஓராண்டு வரை ஆகிறது. விடுமுறை தினத்தன்றும் பணிபுரிந்து வருவதால், மனச்சோர்வு ஏற்படுகிறது.
இதில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடி நியமனத்தில் நியமிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே பணிபுரியும் நபர்கள், ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆள்பற்றாக்குறை மேலும் கூடுகிறது என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் 600 பேர்: சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் துறையில் மட்டும் இளநிலை உதவியாளர், உதவியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களில் மட்டும் சுமார் 400 பேர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கோவை, மதுரை, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட 7 இடங்களில், அரசு தேர்வுத்துறையின் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...