நிலவள வங்கிகளின் செயல்பாடுகள் முடக்கம்?
வேதாரண்யம்: தமிழகத்தில் செயல்படும் நிலவள வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டு வந்த பல்நோக்கு கடன் முறை கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டதால், அந்த வங்கிகளின் செயல்பாடு முடக்கமடைவதுடன், வேளாண் சார்புடைய வளர்ச்சி


வேதாரண்யம்: தமிழகத்தில் செயல்படும் நிலவள வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டு வந்த பல்நோக்கு கடன் முறை கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டதால், அந்த வங்கிகளின் செயல்பாடு முடக்கமடைவதுடன், வேளாண் சார்புடைய வளர்ச்சியும் பாதிப்படைந்து வருகிறது.
தமிழகத்தில் 180 வட்டாரங்களில் நிலவள வங்கிகள் செயல்படுகின்றன. சுய அதிகாரம் கொண்ட இந்த வங்கிகளை முறைப்படுத்த மாவட்டத் தலைமையகங்களில் மாவட்டத் தலைமை வங்கிகளும், அதை நிர்வகிக்க மாநில தலைமை வங்கியும் உள்ளன.
இந்த வங்கிகள் ஆரம்ப நிலையில் நீண்டகாலக் கடன் அளிக்கும் நில அடமான வங்கிகளாகச் செயல்பட்டன. தொடர்ந்து, 1971-களில் நிலவள வங்கியாக மாற்றமடைந்தன.
நிலவள வங்கி மூலம் ஆரம்பத்தில் தனியாரிடம் கூடுதலான வட்டிக்கு ஒப்புக்கொண்டு நில உடைமையாளர்கள் பெற்ற கடனைத் திருப்ப அடமான முன்கடன் அளிக்கப்பட்டது. மேலும், நில மேம்பாடு, கிணறு அமைத்தல் போன்ற நீர்ப் பாசன முறைகளுக்கும் கடன்கள் வழங்கப்பட்டன.
பின்னர், இது விரிவுப்படுத்தப்பட்டு பண்ணைப் பயன்பாட்டுக்கு தேவையான டிராக்டர், டயர் மாட்டு வண்டி, ஆயில் என்ஜின், பவர் டிரில்லர், கரும்பு பண்ணைக் கருவிகள் வாங்கவும், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு தவிர சவுக்கு மரச் சாகுபடி போன்றவற்றுக்கு கடன்கள் அளிக்கப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளாக ஊரக வளர்ச்சி வங்கி என்ற பெயரில் இயங்கி வரும் இந்த வங்கிகள் சிறு தொழில் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவி வந்தன.
மாவட்டத் தொழில் மையத்தின் சான்றுகள் பெற்று சிறிய அளவு அரிசி மில், கயிறு உற்பத்தி நிலையங்கள் தொடங்கவும், கார், வேன், மண்வெட்டும் இயந்திரம் உள்ளிட்டவை வாங்கவும், பொது சேவை பயன்பாட்டுக்கான வணிக வளாகம், திருமண அரங்கம் போன்றவை அமைக்கவும் கடன்கள் அளிக்கப்பட்டன.
இந்த வங்கிகளின் சேவையால் ஊரகப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் வெள்ளம், வறட்சி என மாறிமாறி ஏற்பட்ட பருவ நிலை காரணமாக வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பயனாளிகளிடையே பின்னடைவு ஏற்பட்டது.
இதனால் கொடுத்த கடனில் வசூல் செய்ய வேண்டிய குறைந்தபட்சத் தொகையான மூன்றில் ஒரு பங்கு கூட பல வங்கிகளுக்கு கிடைக்காமல் போனது.
இதையடுத்து, வங்கிகள் நிதி ஆதாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடன் அளிப்பதும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ. 7 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு நிலவள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு பயனளித்தது.
இந்தக் கடன் தள்ளுபடிக்கு பின்னராவது வங்கிகள் பழைய செயல்பாட்டு நிலைக்கு வரும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், அரசின் கொள்கை நிலைப்பாடு வங்கிகளின் முழுமையான செயல்பாட்டுக்கு வழிவகுக்கவில்லை.
கடன் தள்ளுபடியான பின்னரும் பயனாளிகள் செலுத்தியுள்ள பங்குத் தொகையைக் கூட திரும்ப அளிக்க முடியாத நிலை நீடிக்கிறது.
அத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளாக வேளாண் பண்ணை உள்ளிட்ட பல்நோக்கு தேவைக்கான கடன்கள் அளிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், பயனாளிகள் வருகை வெகுவாகக் குறைந்து வங்கிச் சேவை முடக்கமடைந்துள்ளது.
நிர்வாகம் மற்றும் பணியாளர் ஊதியச் செலவினத்தைக் கருத்தில் கொண்டு, அண்மைக் காலமாக இந்த வங்கிகளில் நகை ஈட்டுக்கடன் மட்டும் அளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கடன் முறைகளை ஏற்கெனவே மற்ற வணிக வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்களில் குறைவான வட்டி விகிதத்தில் செயல்படுத்தி வருவதால், நிலவள வங்கிகளின் மீதான நாட்டம் குறைவாகவே உள்ளதால் தற்போது பெயரளவிலான செயல்பாடே உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் முன்னாள் செயலாளர் ஆறுமுகம் கூறியது:
வைத்தியநாதன் குழு பரிந்துரைப்படி, வங்கிக்கு கிடைக்க வேண்டிய நிதி ஆதாரத்தை அரசு பெற்றுத் தர வேண்டும். நபார்டு வங்கி அளிப்பதாக ஒப்புக் கொண்டுள்ள தொகையான ரூ.2700 கோடியை வங்கிகளுக்கு அரசு பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான், நிலவள வங்கிகள் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்றார் அவர்.
எனவே, சேவை முடக்கமடைந்து வரும் நிலவள வங்கிகளின் முழு செயல்பாட்டுக்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஊரகப் பகுதியில் பொருளாதார மேம்பாடு வளர்ச்சி காணும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...