பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பெரும் துயரில் 1000 குடும்பங்கள்!

உதகை, ஜூலை 20:  உதகை அருகேயுள்ள பி.மணியட்டி ஹாடாவில் பொதுமக்கள் வசதிக்காக தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாற்றுப் பாதையின்றி சுமார் 1,000 குடும்பங்களைச் சேர்ந்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:47 pm

ஏ. பேட்ரிக்

உதகை, ஜூலை 20:  உதகை அருகேயுள்ள பி.மணியட்டி ஹாடாவில் பொதுமக்கள் வசதிக்காக தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் மாற்றுப் பாதையின்றி சுமார் 1,000 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மழைக் காலங்களில் அவரவர் வீடுகளுக்குத் திரும்பக்கூட வழியின்றி தவிக்கின்றனர்.

  உதகை அருகேயுள்ள கிராமம் பி.மணியட்டி. இங்கிருந்து துளிதலை, கன்னெகமந்து, தர்மத்தோப்பு, புதுஹட்டி மற்றும் இத்தலார் சந்திப்பு பகுதிகளுக்குச் செல்ல நடைபாதை மட்டுமே உள்ளது. அதனால் பி.மணியட்டி பகுதியையும், துளிதலை செல்லும் பாதையையும் இணைப்பதற்காக பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.  

  இப்பகுதியில் பாலம் அமைப்பதற்காக கடந்த 2006-ம் ஆண்டில் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பி.மணியட்டி-இத்தலார் இணைப்புச் சாலை என்ற பெயரில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.     

  அதைத் தொடர்ந்து பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கின. இதற்காக ரூ.16 லட்சம் வரை செலவிடப்பட்டது.  

  ஆனால், தற்போது இப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் சாதாரண காலங்களில்கூட முழங்கால் வரை ஓடும் தண்ணீரில் நடந்துதான் ஆற்றைக் கடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.   

  இதுவே மழைக் காலத்தில் பெருந்துயரமாக மாறி விடுகிறது. ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துவிட்டால் மக்கள் ஆற்றைக் கடக்கவே முடியாத நிலை உள்ளது.

அதிலும் பள்ளிக் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்.

  இப்பணிகள் நிறுத்தப்பட்டதற்கான காரணமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பாலத்தின் ஒரு பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் கட்டி முடிக்கப்பட்டது.

இப்பணிகளை முழுமை செய்ய ஊராட்சி நிர்வாகமோ அல்லது ஊராட்சி ஒன்றியமோ முன்வருவதில்லை. அதனால் இப்பாலத்தை இருபுறமும் இணைக்கும் இணைப்புச் சாலையோ அல்லது தற்போது கட்டப்பட்டுள்ள பாலத்தைப்போல மற்றொரு இணைப்போ இதுவரை கட்டப்படவில்லை.

  இந்த இணைப்புப் பாலம் கட்டி முடிக்கப்படாததால் துளிதலை, தர்மத்தோப்பு மற்றும் தோடரின பழங்குடி மக்கள் வசிக்கும் கன்னெகமந்து பகுதிகளிலிருந்து அவசரச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுவோர் தொட்டில் போல கட்டித்தான் தூக்கி எடுத்து செல்லப்படுகின்றனர்.

  பி.மணியட்டி கிராமத்தில் வசித்தாலும் துளிதலை பகுதியில்தான் அம்மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதனால், விவசாயப் பொருள்களைக் கொண்டு செல்வதிலும், பசுந்தேயிலைகளைக் கொண்டு வருவதிலும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.  

  விவசாயிகள் தங்கள் வருமானத்துக்கென பாலைக் கூட கொண்டு சென்று விற்க முடியாத நிலை உள்ளது.

  அத்துடன் சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் நடமாடவே முடியாத நிலை உள்ளது.

இப்பகுதி மக்களுக்கு நியாயவிலைக் கடை பி.மணியட்டி பகுதியில்தான் உள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்குக் கூட சுமார் 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது.

  இத்தகைய பிரச்னைகளுக்காகவே இப்பகுதியில் பாலம் கட்டுவதற்கும், இணைப்புச்  சாலை அமைப்பதற்கும் தங்களது நிலத்தையே அரசுக்கு இலவசமாக இங்குள்ள மக்கள் அளித்துள்ளனர்.   

  ஆனால், பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டதால் இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கக்கூட வழியின்றி தவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

  வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்குவதற்குள்ளாவது இப்பகுதியில்

தடை பட்டுள்ள பாலம் கட்டும் பணிகளை முடித்துத் தர வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.