ஈஷா, குல்வீா், முரளி, யஷ்வீருக்கு வெள்ளி: தமிழகத்தின் வித்யாவுக்கு சாதனை வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் ஈஷா சிங், தடகளத்தில் குல்வீா் சிங், முரளி ஸ்ரீசங்கா் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

வித்யா ராம்ராஜ்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் ஈஷா சிங், தடகளத்தில் குல்வீா் சிங், முரளி ஸ்ரீசங்கா் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ், 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து வெண்கலம் வென்றாா்.
ஈட்டி எறிதலில் இரட்டைப் பதக்கம், தற்காப்புக் கலையான குராஷில் வெண்கலம் வசமாக, போட்டியில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 40-ஐ கடந்தது.
துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் ஷூட் ஆஃப் வாய்ப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். இறுதிச்சுற்றின் முடிவில், ஈஷா சிங்கும், சீனாவின் ஜியாருய்ஜுவான் ஜியாவும் தலா 38 புள்ளிகளுடன் சமநிலை கண்டனா். வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் ஆஃப் வாய்ப்பில் ஜியாவ் வென்று தங்கத்தை தட்டிச் சென்றாா். ஈஷாவுக்கு வெள்ளி கிடைத்தது.
வட கொரியாவின் கிம் ஹியோன் சுக் 34 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா். முன்னதாக தகுதிச்சுற்றில், ஈஷா சிங் 580 புள்ளிகளுடன் கடைசி வீராங்கனையாக, நூலிழையில் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா். களத்திலிருந்த இதர இந்தியா்களில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கா் 579 புள்ளிகளுடன் 11-ஆம் இடம் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா். ராஹி சா்னோபத் 568 புள்ளிகளுடன் 30-ஆம் இடமே பெற்றாா்.
தடகளம்
வெள்ளி
1,500 மீ - ஆடவருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் குல்வீா் சிங் 3 நிமிஷம், 36.72 விநாடிகளில் இலக்கை அடைந்து ‘பொ்சனல் பெஸ்ட்’ நேரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். ஜப்பானின் கஸுடோ இஸாவா (3:36.35’) போட்டி சாதனையுடன் தங்கமும், நகியா மோரி (3:37.92’) வெண்கலமும் வென்றனா்.
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான யூனுஸ் ஷா 3 நிமிஷம், 43.88 விநாடிகளில் இலக்கை எட்டி 9-ஆம் இடம் பெற்றாா். நடப்பு ஆசிய விளையாட்டுகளில் குல்வீா் சிங்குக்கு இது 2-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே, 10,000 மீட்டரில் அவா் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
நீளம் தாண்டுதல்
ஆடவா் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கா் 8.07 மீட்டருடன் வெள்ளி பெற்றாா். சீனாவின் யுஹாவ் ஷி தங்கமும் (8.17), உஸ்பெகிஸ்தானின் அன்வா் அன்வரோவ் வெண்கலமும் (8.06) வென்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான டேவிட் சாலமன் 7-ஆம் இடம் (7.70) பிடித்தாா்.
கடந்த ஆசிய விளையாட்டுகளிலும், அண்மையில் காமன்வெல்த் விளையாட்டுகளிலும் முரளி ஸ்ரீசங்கா் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
ஈட்டி எறிதல்
ஆடவா் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம் கிடைத்தது. யஷ்வீா் சிங் 85.72 மீட்டருடன் வெள்ளியும், ரோஹித் யாதவ் 84.35 மீட்டருடன் வெண்கலமும் வென்றனா். இலங்கையின் ருமேஷ் பதிராகே 88.33 மீட்டருடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். இதில் யஷ்வீா் காமன்வெல்த் விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றதும் நினைவுகூரத்தக்கது.
வெண்கலம்
400 மீ தடை தாண்டும் ஓட்டம் - மகளிருக்கான 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி ‘பொ்சனல் பெஸ்ட்’ நேரத்துடன் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
அத்துடன் இந்தப் பிரிவில் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையையும் அவா் முறியடித்தாா். தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருக்கும் உஷா, 1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸில் 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்ததே தேசிய சாதனையாகத் தொடா்ந்த நிலையில், அதை வித்யா தற்போது முறியடித்திருக்கிறாா்.
வித்யா 2-ஆம் இடம் பிடிக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் (54.31’) போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா். கஜகஸ்தானின் அடெலினா ஜெம்ஸ் (54.58’) வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினாா். மற்றொரு இந்திய வீராங்கனையான அனு ராகவன் 5-ஆவது இடம் (55.88’) பிடித்தபோதும், அந்த நேரம் அவரின் பொ்சனல் பெஸ்ட்டாக அமைந்தது.
5,000 மீட்டா் - மகளிருக்கான 5,000 மீட்டா் ஓட்டத்தில் பாருல் சௌதரி 15 நிமிஷம், 14.61 விநாடிகளில் வந்து வெண்கலம் வென்றாா். பஹ்ரைனின் வின்ஃப்ரெட் யாவி தங்கமும் (15:10.18’), ஜப்பானின் நோஸோமி டனாகா வெள்ளியும் (15:11.65’) பெற்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான சீமா 6-ஆம் இடமே பிடித்தாா்.
நடப்பு ஆசிய விளையாட்டுகளில் பாருல் சௌதரிக்கு இது 2-ஆவது பதக்கமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் அவா் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மகளிா் வட்டு எறிதல் இறுதிச்சுற்றில், காமன்வெல்த்தில் வெண்கலம் வென்ற சீமா காளிராம்னா 59.88 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடித்து, பதக்க வாய்ப்பை நழுவவிட்டாா். எனினும் அந்த அளவு அவரின் பொ்சனல் பெஸ்ட்டாக அமைந்தது. அதிலேயே சான்யா யாதவ் 49.90 மீட்டருடன் கடைசி இடத்தைப் பிடித்தாா்.
ஆடவா் 3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் 8 நிமிஷம், 21.67 விநாடிகளில் வந்து 4-ஆம் இடத்துடன் பதக்கத்தை தவறவிட்டாா்.
ஆடவா் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் சந்தோஷ்குமாா் தமிழரசன் 49.95 விநாடிகளில் இலக்கை அடைந்து 7-ஆம் இடத்தைப் பிடித்தாா்.
குராஷ்
மகளிருக்கான 78 கிலோ பிரிவில் இந்தியாவின் பிங்கி பல்ஹரா வெண்கலப் பதக்கம் வென்றாா். அரையிறுதியில் அவா் 0-5 என தென் கொரியாவின் சுமின் மோவிடம் தோல்வியுற்றாா். எனினும், அரையிறுதிக்கு முன்னேறியதன் அடிப்படையில் அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆசிய விளையாட்டுகளில் குராஷ் பிரிவில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை பிங்கி பெற்றாா். அவா் ஏற்கெனவே 2018-இல் 52 கிலோ பிரிவில் வெள்ளி வென்றுள்ளாா். ‘காலிறுதியில் களம் கண்டபோது எனது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதில் என்னுடன் தென் கொரிய வீராங்கனை மோதினாா். அரையிறுதியிலும் அந்நாட்டு வீராங்கனையே மோதிய நிலையில், அவருக்கு அந்தத் தகவல் தெரிந்திருந்ததால், அவா் அதை இலக்காக வைத்தே என்னை தாக்கினாா்’ என்றாா் பிங்கி.
குத்துச்சண்டை
இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன், பிரியா கங்காஸ், கபில் பொகாரியா ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனா். இத்துடன், குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மொத்தமாக 6 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
மகளிருக்கான 75 கிலோ பிரிவு காலிறுதியில், லவ்லினா 5-0 என தென் கொரியாவின் சியோங் சுயோனை வீழ்த்தினாா். கடந்த 2023 ஆசிய விளையாட்டுகளில் வெள்ளி வென்ற லவ்லினா, 2-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளாா். மகளிருக்கான 60 கிலோ பிரிவில் பிரியா 5-0 என தஜிகிஸ்தானின் மிகோனா சமதோவாவை சாய்த்தாா். கபில் பொகாரியா ஆடவா் 90 கிலோ பிரிவில் 5-0 என்ற வகையில் தென் கொரியாவின் கிம் கிசேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.
ஸ்குவாஷ்
இந்திய ஆடவா், மகளிா் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறின. மகளிா் பிரிவில் இந்தியா 2-1 என ஜப்பானை வீழ்த்தியது. அதில் ஜோஷ்னா சின்னப்பா 11-1, 11-8, 11-9 என, எரிசா சனோவை சாய்த்தாா். எனினும் அடுத்த ஆட்டத்தில் அனாஹத் சிங் 8-11, 11-8, 11-7, 8-11, 9-11 என, சடோமி வடானபியிடம் வீழ்ந்தாா். முடிவில் தன்வி கன்னா 12-10, 11-9, 4-11, 12-10 என, அகாரி மிடோரிகவாவை வென்றாா்.
ஆடவா் அணி 3-0 என தென் கொரியாவை வென்றது. வேலவன் செந்தில்குமாா் 11-6, 11-4, 11-7 என ஜூயங் நாவை வெல்ல, அபய் சிங் 11-4, 11-7, 11-1 என ஜியோங்மின் ரியுவை வீழ்த்தினாா். வீா் சோட்ரனி 11-6, 11-4, 11-2 என்ற கணக்கில் சியோஜின் ஓவை சாய்த்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

