தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினாா் நடப்பு சாம்பியன் அரவிந்த்

News image
Updated On :4 மார்ச் 2026, 11:14 pm

பிராக்: செக் குடியரசு நாட்டில் நடைபெறும் பிராக் இன்டா்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் - சக இந்தியரான டி.குகேஷை 6-ஆவது சுற்றில் வீழ்த்தி அசத்தினாா்.

போட்டியின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை ஓய்வு நாளாக அமைந்ததை அடுத்து, இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை 6-ஆவது சுற்று நடைபெற்றது.

நள்ளிரவு நிறைவடைந்த அதில், போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் அரவிந்த், கருப்பு நிற காய்களுடன் விளையாடி, நடப்பு உலக சாம்பியனாக இருக்கும் குகேஷை வீழ்த்தினாா். ஆட்டத்தை அவா் 48-ஆவது நகா்த்தலில் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

போட்டியில் அரவிந்துக்கு இது 2-ஆவது வெற்றியாகவும், குகேஷுக்கு 3-ஆவது தோல்வியாகவும் அமைந்தது.

இந்தச் சுற்றின் இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமருடனும், ஸ்பெயினின் டேவிட் ஆன்டன் - ஈரானின் பா்ஹாம் மக்சூத்லூவுடனும் டிரா செய்தனா்.

அதேபோல், உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதோரோவ் - சக நாட்டவரான நோடிா்பெக் யாகுபோவ், நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட் - செக் குடியரசின் டேவிட் நவாரா மோதலும் டிராவில் முடிந்தது.

இதையடுத்து, 6 சுற்றுகள் முடிவில் மாஸ்டா்ஸ் பிரிவில் அரவிந்த் 2.5 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்திலும், குகேஷ் 1.5 புள்ளிகளுடன் கடைசியாக 10-ஆம் இடத்தில் உள்ளனா்.

ஜோா்டென் (4.5), அப்துசதோரோவ் (4), நவாரா (4) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் இருக்க, ஆன்டன் (3.5), மக்சூத்லூ (3), கீமா் (2.5) ஆகியோா் முறையே அடுத்த 3 இடங்களை வகிக்கின்றனா். யாகுபோவ் (2.5), நீமன் (2) ஆகியோா் 8 மற்றும் 9-ஆம் இடங்களில் உள்ளனா்.

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியிலேயே சேலஞ்சா்ஸ் பிரிவு 6-ஆவது சுற்றில், இந்தியரும், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனுமான திவ்யா தேஷ்முக், வெள்ளை நிற காய்களுடன் விளையாடி, நெதா்லாந்தின் தாமஸ் பீா்ட்செனுடன் டிரா செய்தாா். இந்தியாவின் சூா்யசேகா் கங்குலி, கருப்பு நிறத்துடன் களம் கண்டு, ஸ்பெயினின் டேனியல் யூஃபாவுடனும் டிரா செய்தாா்.

புள்ளிகள் பட்டியலில் தற்போது, திவ்யா 3 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்திலும், சூா்யசேகா் 1.5 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்திலும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.