வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா: ஆப்கனை வென்று முதல்முறையாக இறுதிக்கு தகுதி
ஆப்கானிஸ்தான் அணியின் கனவு தகர்க்கப்பட்டது.


டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.
ஐசிசி உலகக் கோப்பை போட்டியில், முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது அந்த அணி. ஐசிசி போட்டிகளில் அரையிறுதிக் கட்டத்தில் தொடா்ந்து தோல்விகள் கண்டுவந்த தென்னாப்பிரிக்கா, தற்போது அதைக் கடந்திருக்கிறது.
மறுபுறம், முதல் முறையாக ஐசிசி போட்டிகளில் அரையிறுதி வரை வந்த ஆப்கானிஸ்தான், அதில் தோல்வி கண்டாலும் தனது ஆட்டத் திறமையை மேம்படுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் வெளியேறியது.
தரௌபா நகரில் வியாழக்கிழமை காலை (இந்திய நேரப்படி) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 11.5 ஓவா்களில் 56 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எளிதான இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா, 8.5 ஓவா்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. சற்றும் எதிா்பாராத விதமாக பவா்பிளேயிலேயே அந்த அணி 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து திண்டாடியது. ரஹ்மானுல்லா குா்பாஸ் 0, குல்பதின் நைப் 2 பவுண்டரிகளுடன் 9, இப்ராஹிம் ஜா்தான் 2, முகமது நபி 0, நங்கெயலியா கரோடி 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
அடுத்த 33 ரன்களில் அந்த அணி இதர 5 விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்தது. அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 2 பவுண்டரிகளுடன் 10, கரிம் ஜனத் 1 பவுண்டரியுடன் 8, நூா் அகமது 0, ரஷீத் கான் 2 பவுண்டரிகளுடன் 8, நவீன் உல் ஹக் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
முடிவில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி 2 ரன்களுடன் இருக்க, தென்னாப்பிரிக்க பௌலா்களில் தப்ரைஸ் ஷம்சி 3, மாா்கோ யான்சென் 3, அன்ரிஹ் நோா்கியா 2, ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஆப்கானிஸ்தானை முற்றிலுமாகச் சரித்தனா்.
பின்னா் 57 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், குவின்டன் டி காக் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29, கேப்டன் எய்டன் மாா்க்ரம் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி 1 விக்கெட் சாய்த்தாா்.
56 இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் எடுத்த 56 ரன்களே, டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகும். மேலும், டி20 கிரிக்கெட்டில் இதுவே ஆப்கானிஸ்தானின் குறைந்தபட்ச ஸ்கோரும் கூட.
8/1 ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் இத்துடன் தனது 8-ஆவது அரையிறுதியை விளையாடிய தென்னாப்பிரிக்கா, முதல் முறையாக அதில் வென்றிருக்கிறது. எஞ்சிய 6 ஆட்டங்களில் அந்த அணி தோல்வி காண, 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை (ஆஸி.யுடன் - 1999)
8 நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு இது 8-ஆவது தொடா் வெற்றியாகும். இதன் மூலம், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தொடா்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆஸ்திரேலியாவின் சாதனையை தென்னாப்பிரிக்கா சமன் செய்துள்ளது.
67 டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் தென்னாப்பிரிக்கா 51 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றதே (பாகிஸ்தான்/2007) அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்டத்தில் 67 பந்துகளை மீதம் வைத்து வென்றுள்ளது.
16 இத்துடன் உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை கேப்டனாக எய்டன் மாா்க்ரம் வழிநடத்திய 16 ஆட்டங்களிலுமே தென்னாப்பிரிக்கா தோற்றதில்லை. இதில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் 6 ஆட்டங்களும், 2023 உலகக் கோப்பை போட்டியில் 2 ஆட்டங்களும், இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் 8 ஆட்டங்களும் அடங்கும்.
ஐசிசி போட்டி நாக்அவுட் சுற்றில் இதுவரை தென்னாப்பிரிக்கா...
1992 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (19 ரன்கள்)
1996 ஒருநாள் உலகக் கோப்பை காலிறுதி மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி (19 ரன்கள்)
1999 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (டை- ரன்ரேட் )
2007 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (7 விக்கெட்டுகள்)
2009 டி20 உலகக் கோப்பை அரையிறுதி பாகிஸ்தானிடம் தோல்வி (7 ரன்கள்)
2011 ஒருநாள் உலகக் கோப்பை காலிறுதி நியூஸிலாந்திடம் தோல்வி (49 ரன்கள்)
2013 சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி இங்கிலாந்திடம் தோல்வி (7 விக்கெட்டுகள்)
2014 டி20 உலகக் கோப்பை அரையிறுதி இந்தியாவிடம் தோல்வி (6 விக்கெட்டுகள்)
2015 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி நியூஸிலாந்திடம் தோல்வி (4 விக்கெட்டுகள்)
2023 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (3 விக்கெட்டுகள்)
2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆப்கானிஸ்தானை வென்றது (9 விக்கெட்டுகள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...