டெல்லி வெற்றியால் சூடு பிடித்திருக்கும் ஐபிஎல் போட்டி!
டெல்லியின் வெற்றி எதிர்பாராத ஒன்று. இதனால் பிளேஆஃப் கணிப்புகள் எல்லாம் பொய்யாகப் போகிற...


ஹைதராபாத் அணி டெல்லி அணியிடம் தோற்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. நேற்றைய டெல்லியின் வெற்றி எதிர்பாராத ஒன்று. இதனால் பிளேஆஃப் கணிப்புகள் எல்லாம் பொய்யாகப் போகிற வாய்ப்பு உருவாகியுள்ளது.
நேற்றைய ஆட்டத்துக்கு முன்புவரை மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகளின் பிளேஆஃப் வாய்ப்பு நிச்சயம் என கணிக்கப்பட்டது. இதில் மும்பை ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. கொல்கத்தாவுக்கு 4 ஆட்டங்களிலிருந்து இன்னும் ஒரு வெற்றி போதும். ஹைதராபாத்துக்கும் நான்கில் இரண்டில் வென்றால் பிளேஆஃப் உறுதி என்கிற நிலைமை இருந்தது, நேற்றைய ஆட்டத்தில் தோற்கும்வரை. புணேவும் நான்கில் இரண்டில் வென்றால் போதும் என்கிற நிலைமை இருந்ததால் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புணே ஆகிய அணிகள் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும், வேண்டுமானால் கடைசி இடத்தை பஞ்சாப் தட்டிப் பறிக்கலாம் என்கிற மாதிரியான கணிப்புகளே இருந்தன.
ஆனால் நேற்று என்ன நடந்தது?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
இரு அணிகளுக்கும் இடையே தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வென்றது.
யுவராஜ் சிங் நேற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 34 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் கடந்தார். யுவராஜ் சிங் 41 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இருப்பினும் டெல்லி அணி வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வெற்றியைப் பறித்துக்கொண்டார்கள்.
இதனால் சீட்டுக்கட்டைக் கலைத்துப்போட்டதுபோல் ஆகிவிட்டது. ஹைதராபாத் அணிக்குப் புதிய நெருக்கடி உருவாகிவிட்டது. இந்தத் தோல்வியால் அந்த அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமலும் போகலாம்.
எப்படி என்று பார்க்கலாம்.
மும்பை, கொல்கத்தா அணிகளைத் தவிர்த்துவிடலாம். அடுத்த இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி நேற்றைய தோல்வியால் தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அடுத்து ஆடவுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டில் வென்றாகவேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இன்றைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் புணே அணி ஜெயித்துவிட்டால் அது மூன்றாவது இடத்துக்கு முன்னேறிவிடும்.
பஞ்சாப் அணி மீதமுள்ள 5 ஆட்டங்களில் நான்கையும் டெல்லி அணி மீதமுள்ள ஐந்து ஆட்டங்களில் ஐந்தையும் வென்றால் பிளேஆஃப் உறுதி. குஜராத், பெங்களூர் அணிகள் இந்த ஆட்டத்தில் இல்லை.
நேற்றைய டெல்லியின் வெற்றி பிளேஆஃப் கணிப்புகளை மாற்றிவிட்டது. ஹைதராபாத்துக்குக் கடும் நெருக்கடியையும் டெல்லிக்கு ஒரு வாய்ப்பையும் அளித்துவிட்டது. இன்று புணே ஜெயித்துவிட்டால் ஹைதராபாத்துக்கு மேலும் சிக்கல் உருவாகி நான்காம் இடத்துக்குப் போராடவேண்டிய நிலைமை உருவாகும்.
ஐபிஎல் போட்டி, இப்போதுதான் சூடு பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...