டி20 உலகக் கோப்பை 2026-க்கான ஆஸ்திரேலிய அணி கடந்த ஜன.31ஆம் தேதி இரண்டு மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டது.
முன்னாள் கேப்டன் பாட் கம்மின்ஸ், மேத்திவ் ஷார்ட் இருவருக்குப் பதிலாக, புது முகங்களான பென் துவார்ஷுயஸ், மாட் ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு திறன் வாய்ந்ததா என்பதைக் குறித்து பார்ப்போம்.
ஆஸி. அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், மாட் ரென்ஷா, க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லீஷ், கூப்பர் கனோலி, மேத்திவ் குன்னஹ்மேன், நாதன் எல்லீஸ், ஜோஷ் ஹேசில்வுட்*, ஆடம் ஸாம்பா, சேவியர் பார்ட்லெட், பென் துவார்ஷுயஸ்.
(ஹேசில்வுட்டுக்குப் பதிலாக முதல் சில போட்டிகளில் ஷான் அப்பாட் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.)
ஆஸ்திரேலிய அணி தனது முதல் நான்கு போட்டிகளையும் இலங்கையில்தான் விளையாடுகின்றது.
1. அயர்லாந்துக்கு எதிராக - பிப்.11 - கொழும்பு, பிரேமதாசா திடல்.
2. ஜிம்பாப்வேக்கு எதிராக - பிப்.13 - கொழும்பு, பிரேமதாசா திடல்.
3. இலங்கைக்கு எதிராக - பிப்.16 - கண்டி, பல்லகெலே திடல்.
4. ஓமனுக்கு எதிராக, பிப்.20 - கண்டி, பல்லகெலே திடல்.
ஆஸ்திரேலிய அணி குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் இருக்கின்றன.
சுழல் பந்தில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
சுழல் பந்துக்குச் சாதகமான திடலில் விளையாடும்போது தற்போதைய ஆஸி. அணியினர் திணறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இதற்கான மிகச் சிறந்த உதாரணமாக பாகிஸ்தானுடனான டி20 தொடரே சாட்சியாக இருக்கிறது. கடைசி இரண்டு போட்டிகளில் 108, 96 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது.
பல்லேலகா திடலைத் தவிர்த்து பிரேமதாசா திடலின் சராசரி ரன்கள் 130 - 150க்கும் குறைவாகவே இருக்கின்றன. இதற்கேற்ற பேட்டர்கள் தற்போதைய ஆஸி. அணியில் இல்லை என்பதுதான் ஆஸி.யின் மிகப்பெரிய பலவீனம்!
இந்தியாவில் விளையாடும்போது இந்த ஆஸி. அணி மிகுந்த அதிரடியாக 200-க்கும் அதிகம் ரன்கள் குவிக்கலாம் அல்லது இந்தியாவிலேயும் மோசமாக ஆட்டமிழக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில் பாகிஸ்தான் தொடரில் டிம் டேவிட், மேக்ஸ்வெல் இல்லை. அவர்கள் இருவருமே சுழல் பந்துகளை நன்றாக விளையாடுவார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
என்ன மாற்றங்கள் சரியாக இருந்திருக்கும்?
ஆறு ஆல்ரவுண்டர்களுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இது சில வேளைகளில் பின்னடைவைத் தரும். அவர்களின் ஃபார்மும் மெச்சும்படி இல்லாதது கவனிக்கத்தக்கது.
இலங்கைப் போன்ற திடல்களில் பேட்டர்களுக்குக் குறைவான முக்கியத்துவம் உள்ள அணிகள் விரைவில் ஆட்டமிழக்கவே வாய்ப்புள்ளது.
பிபிஎல் தொடரில் அசத்திய ஜேக் ரிச்சர்ட் எட்வர்ட்ஸ் (ஆல் ரவுண்டர்), பியர்ட்மேன் (வேகப் பந்துவீச்சாளர்) சிறப்பான தேர்வாக இருந்திருக்கும்.
பிபிஎல் தொடரில் கடந்த 2023 முதல் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை (கடைசி 10 இன்னிங்ஸில் 663 ரன்கள், சராசரி 94.7, ஸ்டிரைக் ரேட் 180+ உடன் விளையாடி வருகிறார்) கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏன் அணியில் எடுக்கவில்லை? இவருடன் சேர்த்து மிட்செல் மார்ஷ் மூன்றாமிடத்தில் களமிறங்கியிருந்தால் பேட்டர்களுக்கான குறை நீங்கியிருக்கும்.
”ஸ்மித்தைவிட சிறப்பான டி20 பேட்டர் இப்போதைக்கு ஆஸ்திரேலிய அணியில் இல்லை” என ஹென்ரிக்ஸ் கூறியுள்ளார். முன்னாள் வீரர் மார்க் வாக்கும் இதே கருத்தைக் கூறியிருந்தார்.
டிம் டேவிட், ஸ்டாய்னிஸ் இருக்கும்போது கேமரூன் கிரீன் எதற்கு? ஒரே மாதிரியான மூன்று ஆல்ரவுண்டர்கள் தேவைதானா? இவர்களுடன் கேப்டன் மிட்செல் மார்ஷும் இருக்கிறார். ஆக, ஒரே மாதிரி நான்கு வீரர்கள்.
இந்த இடத்தில்தான் இந்திய அணியின் சமநிலையான அணித் தேர்வு வியக்க வைக்கிறது! (ஹார்திக் - வேகப்பந்து ஆல்ரவுண்டர், அக்ஷர் படேல் - சுழல்பந்து ஆல்ரவுண்டர், ஷிவம் துபே - மித வேகப்பந்து ஆல்ரவுண்டர்)
மூவேந்தர்களும் இல்லாத வேகப் பந்துவீச்சு!
மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் ஆஸி. அணியின் மூவேந்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
ஸ்டார்க் டி20யில் ஓய்வு பெற, கம்மின்ஸ் காயம் காரணமாக விலக, மீதமிருக்கும் ஹேசில்வுட்டுக்கும் காயம் என்பதால் முதலில் சில போட்டிகளில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஷான் அப்பாட் விளையாட இருக்கிறார்.
ஏற்கெனவே, நாதன் எல்லீஸும் காயத்தில் இருக்க, மிகவும் அனுபவமற்ற வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஆஸி. அணி களமிறங்கவிருக்கிறது.
பிபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய இளம் பிரட்லீ எனப்படும் பியர்ட்மேன் டி20 உலகக் கோப்பையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸி.!
கடந்த 2024 உலகக் கோப்பையில் ஆஸி. அணி சூப்பர் 8 சுற்றில் 149 ரன்கள் எடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தானுடன் தோல்வியுற்றது.
இந்தமுறையும் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுவரை முன்னேறலாம். ஆனால், அரையிறுதிக்குச் செல்லும் என உறுதியாகக் கூறமுடியாது.
இந்திய அணியில் இருக்கும் பேட்டிங் நிலைத்தன்மைப் போல ஆஸி. அணியில் இல்லை. அளவுக்கு அதிகமான ஆல்ரவுண்டர்களின் பேட்டிங், பந்துவீச்சிலும் சிறப்பான முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
வழக்கமாக டெஸ்ட், ஒருநாள் அணிகளில் சரியான தேர்வு முறைகளை மேற்கொள்ளும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடந்த மூன்றாண்டுகளாகவே டி20யில் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றது.
பிபிஎல் தொடரில் ஸ்மித் அற்புதமாக விளையாடியும் அணியில் எடுக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐபோல கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தவறான முடிவுகளை எடுத்திருப்பது கேள்விகளை எழுப்பி வருகிறது.
வழக்கமாக உலகக் கோப்பைகளுக்கு முன்பாக ஆஸி. அணி தொடரில் தோற்பது வழக்கமாக இருந்தாலும் இந்தமுறை நிஜமாகவே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணியில் மாற்றங்கள் வருமா அல்லது மீண்டும் உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகுதான் பாடம் கற்றுக்கொள்ளுமா கிரிக்கெட் ஆஸ்திரேலியா?
ஆஸ்திரேலியா போன்ற பலம்வாய்ந்த அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது! (ஆம், இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தேர்வாகும் அளவுக்கு அணித் தேர்வில் சிறப்பாக இருக்கிறது!)
Summary
The Australian squad for the 2026 T20 World Cup was announced on January 31st with two changes. Former captain Pat Cummins and Matthew Short have been replaced by Ben Dwarshuis and Matt Renshaw. Let's examine whether this team is capable of winning the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

போர் நெருக்கடி; 3 நாள் பேருந்து பயணம்..! 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் தேர்வான இராக்!

அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து.. 2-வது முறை சாம்பியன்! 2022 ரீவைண்ட்!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


