ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வரலட்சுமி விரதம் யாரெல்லாம் கடைப்பிடிக்கலாம்? நன்மைகள்!

வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி...

Varalakshmi Vratam

வரலட்சுமி விரதம் - file photo

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:42 pm IST

வரலட்சுமி விரதம் இந்தாண்டு 2026 ஆகஸ்ட் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் முறை, பூஜைக்குத் தேவையான பொருள்கள், பலன்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளாகும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கு அதிபதி மகாலட்சுமி. அவளின் அருள் வேண்டிச் செய்யப்படும் விரதம் இது. ஒருவர் ஏழையாக இருப்பதும், செல்வந்தராகச் செழிப்பதும் அவரவர் கையில் இருக்கின்றது என்றாலும், மகாலட்சுமியின் அருட்கடாட்சம் கிடைத்தால் அனைத்தும் சிறக்கும் என்று ஜோதிடம் சொல்கிறது.

வரலட்சுமி விரதத்தின் புராணக் கதை

சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா. செல்வ வளத்தின் மமதையால் மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், ஒருகட்டத்தில் அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்குச் சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

வரலட்சுமி விரதம் யார் கடைப்பிடிக்கலாம்?

தாய் வழியோ, தந்தை வழியோ இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே வழிவழியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில்லை. மகாலட்சுமி தாயாரை யார் வேண்டுமானாலும் பூஜிக்கலாம். விரதம் இருந்து நோன்பை அனுஷ்டிக்கலாம். குறிப்பாக சுமங்கலி பெண்கள் இதைக் கடைப்பிடிக்கலாம். பெற்றோர் வழி பழக்கமில்லாதவர்கள் திருமணமான அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து ஒவ்வொரு வருடமும் செய்யலாம்.

வீட்டு விலக்கு

ஒருவேளை, வரலட்சுமி விரதத்தின்போது வீட்டுக்கு விலக்காக இருந்தால். அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். பூஜையின்போது மூத்த சுமங்கலிகள் உடனிருந்து மற்ற பெண்களும் சரடைக் கட்டிக் கொள்ளலாம். பின்பு நோன்பு கயிறு வீட்டில் இருப்பவர்கள் கட்டிக் கொள்ளலாம். அதன்பிறகு, சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்குத் தாம்பூலம் வழங்கலாம்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து தானங்கள் செய்து இந்த விரதத்தை நிறைவு செய்யலாம்.

பூஜை முடிந்ததும் அன்றைய நாள் இரவு அம்மனுக்கு ஆலம் (குங்கும நீரில் வெற்றிலை வைத்து கற்பூரம் ஏற்றுதல்) கரைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அம்மன் மீதுள்ள கண்திருஷ்டி நீங்குவதாக ஐதீகம்.

சாஸ்திர முறைப்படி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப் பிரதிஷ்டை, தியானம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்திரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யலாம்.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்

பூஜைக்குத் தேவையானவை

மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனி வாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரி நூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்திரம், கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்

பொங்கல், பச்சைப் பருப்பு பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, சுண்டல்.

பழ வகைகள்

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை, அன்னாசிப் பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை.

பூஜைக்கான முன்னேற்பாடுகள்

வீட்டின் கிழக்கு திசையில் ஈசானிய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைக் கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). கலசத்தின் மேல் மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) அதன்மீது பூக்கள் சூட்டி அலங்கரிக்கலாம்.

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிற்றை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிற்றை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

Story image

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு (ராகு காலத்துக்கு முன்) கலசம் வைக்கத் தொடங்க வேண்டும். (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப்படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாகப் பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்திலிருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டி, ஆவாஹணம் செய்ய வேண்டும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரைப் பூஜித்து அதன்பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும். வரலட்சுமி விரத நாளில் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனதார பிரார்த்தனை செய்து அனைத்து விதமான நலன்களையும் பெறுவோம்.

பலன்கள்

குழந்தைப் பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும்.

ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும்.

கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நிச்சயமாகும்.

கணவன் - மனைவி இடையே மனக் கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.

பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.