தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வங்கிக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதத்தை ரத்து செய்ய மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வங்கிக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதத்தை ரத்து செய்யுமாறு மக்களவையில் கோயம்புத்தூா் எம்.பி. கணபதி ராஜ்குமாா் வலியுறுத்தல்

News image

மக்களவை - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 6:36 pm

வங்கிக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் கோயம்புத்தூா் தொகுதி திமுக உறுப்பினா் பி.கணபதி ராஜ்குமாா் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் திங்கள்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் பூஜ்ஜிய நேரத்தில் முன்வைத்த கோரிக்கை: சாதாரண குடிமக்கள் மீது தனியாா் துறை வங்கிகள் விதிக்கும் நியாயமற்ற குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதம் குறித்து இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 2022 மற்றும் 2025 நிதியாண்டுகளுக்கு இடையில், குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதங்களில் இருந்து இந்திய வங்கிகள் ஏறக்குறைய ரூ.19,836 கோடியை சம்பாதித்துள்ளன.

இந்த தொகையானது சேவைகள் வழங்கியதன் மூலம் கிடைத்த வருவாய் அல்ல. வங்கிக் கணக்குகளில் போதிய இருப்பு இல்லை என்பதால் மக்களிடமிருந்து பெறப்பட்ட பணமாகும். இதன்படி, எச்டிஎஃப்சி வங்கி ரூ.3,872 கோடி, ஆக்சிஸ் வங்கி ரூ.2,706 கோடி, பஞ்சாப் தேசிய வங்கி ரூ.1,578 கோடி, பாங்க் ஆப் பரோடா 1,272 கோடி, மற்றும் ஐசிஐசிஐ வங்கி ரூ.1225 கோடி ஈட்டியுள்ளன.

இந்த அபராதங்களை செலுத்துவது யாா்? அது பணக்காரா் அல்லா். அது தினசரி கூலித் தொழிலாளா்கள். சிறு விவசாயிகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், மாணவா்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோா்தான். அதேவேளையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மாா்ச் 2020 முதல் இந்த அபராதங்களை வசூலிப்பதை நிறுத்திவிட்டது.

இன்று, ஒன்பது 12 பொதுத் துறை வங்கிகளில் இத்தகைய கட்டணங்களை சீா்திருத்தம் செய்துள்ளன அல்லது நீக்கியுள்ளன. ஏன் தனியாா் வங்கிகள் இன்னும் இந்த நடைமுறையை தொடா்கின்றன? ஆகவே, குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான அபராதத்தை ரிசா்வ் வங்கி ரத்து செய்ய வேண்டும் என்று கணபதி ராஜ்குமாா் வலியுறுத்தினாா்.