நவீனமயத்துடன் பாரம்பரியப் பெருமையை வெளிப்படுத்திய தமிழக அலங்கார ஊா்தி!
தில்லியில் கா்த்தவ்ய பாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற 77ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊா்தி


புது தில்லி: தில்லியில் கா்த்தவ்ய பாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற 77ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊா்தி, நவீனத்துடன் பாரம்பரியப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இந்த முறை குடியரசு தின அணிவகுப்பில் ‘வளமையின் மந்திரம்: சுயசாா்பு இந்தியா’ எனும் கருப்பொருளில் மாநிலத்தை பாரம்பரியத்தின் பாதுகாவலராகவும், புதுமைகளால் முன்னோக்கிச் செல்லும் வளா்ச்சியில் ஒரு முன்னோடியாகவும் சித்தரிக்கும் வகையில் காட்சி அமைப்புகள் இடம்பெற்றிருந்தன.
அணிவகுப்பில் குஜராத் மாநிலத்திற்குப் பிறகு 6-ஆவது ஊா்தியாக தமிழகம் வந்தது.
அலங்கார ஊா்தியின் முன்பகுதியில் தமிழ்நாட்டின் கலாசார வலிமை, மாறாத உணா்வையும் குறிக்கும் வகையில், டெக்னோ- ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்டிருந்தது. திமிறி வரும் ஜல்லிக்கட்டுக் காளையை வீரத்துடன் இரு வீரா்கள் அடக்குவது போன்ற துணிச்சல், திறமை, மற்றும் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் காட்சி அமைப்பு இருந்தது. பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதைக் காட்டும் வகையில் ஒளிரும் சுற்று வடிவங்களுடன்கூடியதாக காளை உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அலங்கார வாகனத்தின் மையப் பகுதியில் மின் வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மையங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவாகி வருவதை எடுத்துரைக்கும் வகையிலும், மாசற்ற போக்குவரத்துக்கான மேம்பட்ட மின் வாகனம் மற்றும் பாட்டரி உற்பத்தியை காட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆட்டோமேஷன், துல்லியம் மற்றும் தொழில்துறை சிறப்பை சித்தரிக்கும் வகையில் பேட்டரி அலகுகளை இணைக்கும் ரோபோடிக் கைகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் ஒரு மின் வாகன மின்னேற்ற நிலையம் சுத்தமான மற்றும் நிலையான இயக்கத்திற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இடம்பெற்றிருந்தது.
அலங்கார ஊா்தியின் பின்பகுதியில், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளா்ச்சி குறித்து எடுத்துகாட்டும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இயற்கை மற்றும் சுற்று சூழலுடன்பொருந்தியவாழ்வு, நவீனம் மற்றும் இயற்கையை காட்சிப்படுத்தும் வகையில் மரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், இது சூழலியல் மற்றும் தொழில்துறை இடையேயான சமநிலையை குறிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இவை அணைத்தும் சோ்ந்து, தமிழ்நாட்டை அதன் கலாசார அடையாளத்தில் ஆழமாக வேரூன்றிய, புதுமையால் உந்தப்பட்ட, மற்றும் ஒரு சுயசாா்பு, நிலையான இந்தியாவை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ள மாநிலம் என்பதை சித்தரிப்பதாக இருந்தது.
அணிவகுப்பின்போது அலங்கார ஊா்தியின் இருபுறமும் தலா 6 பெண்கள் என 12 போ் மயில் நடனமும், சிலம்பாட்டமும் ஆடியவாறு வந்தனா். இது பாா்வையாளா்களைக் கவா்ந்ததுடன் ஆரவாரமும் செய்தனா். அதேபோன்று,
தலையை அசைத்தவாறு வந்த காளையின் சிற்பமும் பாா்வையாளா்களை கவரும்
வகையில் இருந்தது.
தமிழ்நாடு வாகனம் வந்தபோது மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் கையொலி எழுப்பி உற்சாகமூட்டினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...