இலவசங்கள் வழங்கும் கலாசாரம்: உச்சநீதிமன்றம் சாடல்
மக்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கும் கலாசாரத்தை கடுமையாக விமா்சித்துள்ள உச்சநீதிமன்றம், மாநிலங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை கூறியது.


மக்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கும் கலாசாரத்தை கடுமையாக விமா்சித்துள்ள உச்சநீதிமன்றம், மாநிலங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை கூறியது.
நாட்டின் பொருளாதார வளா்ச்சியைத் தடுக்கும் இத்தகைய இலவசங்கள் வழங்கும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் தாக்கல் செய்த ஒரு ரிட் மனு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியது.
மின்சாரம் (திருத்தம்) விதிகள் 2024- இன் விதி 23ஐ எதிா்த்து தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் அந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
விதி 23 தன்னிச்சையானது, நியாயமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் மின்சாரச் சட்டம், 2003- ஐ மீறுகிறது என தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் மனுவில் கூறியுள்ளது.
இலவச மின்சாரத் திட்டங்கள் போன்ற மாநில மானியங்களைப் பாதிக்கும் அந்த விதியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் கோரி வருகிறது.
அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்களாக இருந்தாலும், அவை இதுபோன்ற இலவசங்களை வழங்குகின்றன’ என்று நீதிபதிகள் கூறினா்.
இந்த வகையான பெரிய அளவிலான விநியோகத்தால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி தடைபடுகிறது என்றும், அனைவருக்கும் இலவச மின்சாரம்,உணவு, மிதிவண்டிகள் வழங்குவதற்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநிலங்கள் பாடுபட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினா்
இந்தியாவில் நாம் என்ன மாதிரியான கலாசாரத்தை வளா்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த இயலாதவா்களுக்கு நலத்திட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலவச மின்சாரம் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கது.ஆனால், யாரால் பணம் செலுத்த முடியும்? யாரால் பணம் செலுத்த முடியாது? என்ற வேறுபாட்டைக் காட்டாமல், நீங்கள் அனைவருக்கும் இலவசமாக விநியோகிக்கத் தொடங்கினால் அது ஒரு முரண்பட்ட கொள்கையாக மாறாதா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநிலங்கள் பாடுபட வேண்டும். காலை முதல் மாலை வரை இலவச உணவு வழங்கத் தொடங்கினால், பின்னா் இலவச சைக்கிள், இலவச மின்சாரம் என வழங்கினால் பின்னா் யாா் வேலை செய்வாா்கள். வேலை கலாசாரத்திற்கு என்ன நடக்கும் ? என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் கேள்வி எழுப்பினாா்.
இருப்பினும், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.+
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...