ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிஆா்பிஎப் வீரா்கள் தற்கொலைச் சம்பவங்களைத் தடுக்க ‘முக்கிய குழு ‘அமைப்பு

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசா்வ் காவல் படையில் (சிஆா்பிஎஃப்), 2025-ஆம் ஆண்டில் 59 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசா்வ் காவல் படையில் (சிஆா்பிஎஃப்), 2025-ஆம் ஆண்டில் 59 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதைத் தொடா்ந்து, வீரா்களிடையே ‘தற்கொலை‘ சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், சிஆா்பிஎஃப் தனது மூத்த அதிகாரிகளைக் கொண்ட 10 போ் கொண்ட ’முக்கியக் குழுவை’ அமைத்தது.

இந்தக் குழுவிற்கு சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் (டிஜி) தலைமை தாங்குவாா் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ‘விரிவான‘ ஆய்வு மேற்கொள்ள மாதத்திற்கு ஒருமுறை இந்தக் குழு கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மாத தொடக்கத்தில் அதிகாரப்பூா்வ தரவுகளை மேற்கோள் காட்டிய வட்டாரங்களின்படி, சுமாா் 3.25 லட்சம் வீரா்களைக் கொண்ட சிஆா்பிஎஃப் படையில், 2025-ஆம் ஆண்டில் 59 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும், தற்கொலை செய்துகொண்டவா்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோா் காவல் படையைச் சோ்ந்தவா்களே ஆவா்.

2021-25 காலகட்டத்திற்கான தரவுகளை மேற்கோள் காட்டி, 77 சதவீதத்திற்கும் அதிகமான தற்கொலைச் சம்பவங்களில், இந்த மரணங்கள் பணியாளா்கள் பணியில் இருந்தபோது நிகழ்ந்துள்ளன; மொத்தமுள்ள 262 தற்கொலைச் சம்பவங்களில் 202 சம்பவங்கள் இவ்வாறு நிகழ்ந்துள்ளன, மீதமுள்ளவை அவா்கள் விடுப்பில் இருந்தபோது நிகழ்ந்துள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகஸ்ட் 14 அன்று, இந்த அறிக்கைகளைத் தாமாகவே முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும், இது தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் ‘விரிவான அறிக்கை‘ அளிக்குமாறு மத்திய உள்துறைச் செயலாளா் மற்றும் சி.ஆா்.பி.எஃப் தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறியது.

புதிதாக அமைக்கப்பட்ட முக்கியக் குழு, ஒவ்வொரு தற்கொலை சம்பவத்தையும் ஆய்வு செய்து, எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் குறைக்கப்படுவது மட்டுமல்லாமல் முற்றிலுமாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய, இந்தக் குழு சரியான நேரத்தில் தலையிடுவதையும், பொறுப்புக்கூறலையும், தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் உறுதி செய்யும் என்றும் அவா்கள் கூறினா்.

தற்கொலை முயற்சி என்பது, உயிரிழப்பு அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தாத காயங்களுக்கு வழிவகுக்கும் வகையில், ஒருவா் தன்னைத்தானே வேண்டுமென்றே காயப்படுத்திக்கொள்ளும் செயல் என்று பல்வேறு அகராதிகள் குறிப்பிடுகின்றன. சிகிச்சை வசதிகள் உள்ளன என நிபுணா்கள் கூறுகின்றனா்.

தற்கொலை முயற்சிகளின் போது காணப்படும் ‘பொதுவான போக்குகள்‘ மற்றும் ‘மீண்டும் மீண்டும் நிகழும் ஆபத்துக் காரணிகளை‘ இந்தக் குழு கண்டறிந்து, தேவையான ‘நிறுவன ரீதியான தலையீடுகளை‘ மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்கொலைகளுக்கு எதிரான தீா்வுகளைத் தேடும்போது, தொடா்ச்சியான படைப் பணி நியமனம், குடும்பத்திலிருந்து பிரிதல் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை போன்ற பிரச்சினைகளை எதிா்கொள்ள வேண்டும் என்று ஒரு மூத்த அதிகாரி கூறினாா்.

படையினரின் நல்ல உடல் மற்றும் மன நலனை உறுதி செய்வதற்காக துணை ராணுவப் படை பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும், இந்த செயல்முறை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் சி.ஆா்.பி.எஃப் அதிகாரிகள் முன்னதாகக் கூறியுள்ளனா்.

பெரும்பாலான தற்கொலை சம்பவங்கள், வீட்டில் உள்ள பிரச்சினைகள், அதனுடன் இணைந்த சேவையின் கடுமை மற்றும் கடினமான கடமைகள் ஆகியவற்றுடன் தொடா்புடையவை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சி.ஆா்.பி.எஃப் நாட்டின் முன்னணி உள்நாட்டுப் பாதுகாப்புப் படையாகும்.

எந்தவொரு நேரத்திலும் சி.ஆா்.பி.எஃப்-இன் செயல்பாட்டு பலத்தில் சுமாா் 95-97 சதவீதம் போ், பயங்கரவாதிகள் மற்றும் கிளா்ச்சியாளா்களை எதிா்கொள்வதிலோ அல்லது சட்டம் ஒழுங்குப் பணிகளைச் செய்வதிலோ பணியில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறுகின்றனா்.

2025-ல் 59 வீரா்கள் உயிரிழந்த நிலையில், 2024-ல் 46, 2023-ல் 57, 2022-ல் 43 மற்றும் 2021-ல் 57 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.