பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வலுப்பெற வேண்டிய கட்டாயத்தில் பேச்சாற்றல் கலை!

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி கோலோச்சி நிற்பதற்கு காரணமான பேச்சாற்றல் கலையை

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:08 am

ஆ. நங்கையார் மணி


அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி கோலோச்சி நிற்பதற்கு காரணமான பேச்சாற்றல் கலையை செம்மைப்படுத்துவதற்கு,  திமுக, அதிமுக உள்ளிட்ட கழகங்களின் இலக்கிய அணிகள் வலுப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 1939 முதல் 1945-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 2-ஆம் உலகப் போருக்கு பின், உலகம் முழுவதும் 82 நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து விடுதலைப் பெற்றன. அந்த 82 நாடுகளில், பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக ஆட்சி, சில நாடுகளில் ராணுவ ஆட்சி,  ஒருசில நாடுகளில் ராணுவக் கட்டுப்பாட்டிலான ஜனநாயக ஆட்சி, மேலும்  சில  நாடுகளில் சர்வாதிகார ஆட்சி முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில், நாடாளுமன்ற முறையிலான உலகின் மிகப் பெரிய ஜனநாயக ஆட்சி முறை நடைபெறும் நாடாக இந்தியா திகழ்கிறது. 72 ஆண்டுகள் கடந்தும் இந்திய ஜனநாயகம் நிலைத்து இருப்பதற்கு,  அரசியல் கட்சிகளின் செயல்பாடு ஒரு முக்கிய காரணம். கொள்கை ரீதியாகவும்,  அமைப்பு ரீதியாகவும் சில வேறுபாடுகள் இருந்தாலும்,  செயல்பாட்டு அளவில் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டிலேயே பயணிக்கின்றன.
ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் அரசியல் கட்சிகள்,  இன்றைக்கு  சமூக ஊடகங்கள் என்ற பெயரில் கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை, மீம்ஸ் உள்ளிட்ட வழிகளில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மீம்ஸ்களின் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது முன் வைக்கப்படும் கேலியான விமர்சனங்கள், ஒரு சில மணித் துளிகள் மட்டுமே ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஆனால் ஜனநாயகத்திற்கும்,  கருத்துச் சுதந்திரத்திற்கும் இது உகந்ததல்ல என்ற புரிதல் இல்லாமல் போய்விட்டது.  அரசியல் கட்சிகள் மீதான மாண்பு  மக்களிடையே குறைந்து கொண்டே வருகிறது. அந்த சரிவினை மீட்டெடுக்கும் முயற்சியில் உடனடியாக களம் இறங்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.
தரம் தாழ்ந்த விமர்சனங்கள்: கோமாளி, கேடி, கொள்ளைக்காரன், பைத்தியம், உதவாக்கரை, மண்புழு, விஷப்புழு என்பன போன்ற தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்தும் தலைவர்களின் விமர்சனங்களை, கூட்டத்தில் பங்கேற்கும் சில தொண்டர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால் பொதுமக்கள் அவற்றை ரசிப்பதில்லை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் கோலோச்சி நிற்பதற்கு முக்கிய காரணம் பேச்சாற்றல். அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் திமுகவுக்கு வந்தனர் என்பது வரலாறு. திமுக மட்டுமின்றி, அதிமுக, மதிமுக போன்ற கட்சிகளிலும் பேச்சாற்றல் கொண்ட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.
 அடுக்கு மொழியிலும், மக்களின் சிந்தனையை தூண்டும் வகையிலும், இலக்கியம் கலந்தும், அரசியல் பேசிய அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், வைகோ, காளிமுத்து என நீண்ட நெடிய பட்டியலுக்கு சொந்தம் கொண்ட மாநிலம் தமிழகம். ஆனால், இன்றைக்கு பேச்சாற்றால் கொண்ட தலைவர்கள் இல்லாதது 2019 மக்களவைத் தேர்தல் களத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் சிறப்புரையாளர்களில் திருச்சி சிவா எம்.பி. கண்ணியமாக பேசி வருகிறார். அதேபோல், கேலியும் கிண்டலுமாக பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆக்கப்பூர்வமாக உரை நிகழ்த்தி வருகிறார். ஆனால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட வலுவான கருத்துக்களை முன்வைக்க முடியாமல், பிரதமர் மற்றும் முதல்வரை குரங்கு, எருமை என தரம் தாழ்ந்து விமர்சித்து வருவது வெறுப்பின் உச்சமாகப் பார்கப்படுகிறது. நாகரிகமான மேடை பேச்சு குறைந்து வருவதற்கு, வாசிப்பு பழக்கம் இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
வலுப்பெற வேண்டிய கட்டாயத்தில் இலக்கிய அணி: பல்வேறு பிரச்னைகள் குறித்தும், அதற்கு தீர்வு காண வேண்டிய  வழிமுறைகள்  குறித்தும்  பேசி வாக்காளர்களை கவரும் 2ஆம் கட்ட தலைவர்கள் குறைந்துவிட்டனர். இந்த சூழலில், ஒவ்வொரு கட்சியிலும் இலக்கிய அணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
பெயரளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இலக்கிய அணிகளை வலுவான அமைப்புகளாக உருவாக்க வேண்டும். இலக்கிய அணியைச் சேர்ந்தவர்கள் தலைவர்களின் புகழ்பாடிகளாக இல்லாமல், நாட்டு நடப்புகளை எடுத்துரைக்கும் பிரசார பீரங்கிகளாக உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தேசிய கட்சிகள் எழுச்சி பெற முடியாமல் போனதற்கு, திராவிட கட்சிகளின் பேச்சாற்றால் மிக்க  தலைவர்களும், 2-ஆம் கட்ட தலைவர்களுமே முக்கிய காரணம் என்பதை இன்றைய கழகங்களின் தலைவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.