2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கீட்டின் படி உலகம் முழுவதுமாக 62 மில்லியன் பெண்களுக்கு இன்றளவும் கூட அடிப்படை கல்வி பெறுவதற்கான வசதிகள் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு கணக்கீடு என்ன சொல்கிறது என்றால்? 5 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் தங்களது வாழ்நாளில் 160 மில்லியன் (1,135,92,80,000) மணி நேரங்களை பெரும்பாலும் வீட்டு வேலைகளுக்காகவே செலவிடுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு கல்வி கற்கவோ, புதிதாக ஆராய்ச்சிகளில் இறங்கவோ ஏன் விளையாட்டு மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடக்கூட நேரமிருப்பதில்லை. சுருங்கச் சொல்வதென்றால் அந்த நேரங்களில் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுமென்றாலும் கூட அதைப் புறக்கணித்து விட்டு வீட்டு வேலைகளில் உழன்று கொண்டிருக்கும் பெண் குழந்தைகள் இங்கு அதிகம் பேர் இருக்கிறார்கள் என்கிறது. அதே சமயம் இந்தப்பக்கம் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் என்று எடுத்துக் கொண்டீர்களெனில் அவர்களது வாழ்க்கை முறையானது பெண் குழந்தைகளின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அவர்களுக்கு விளையாடுவதும், கல்வி கற்றலுமே முக்கியப் பணிகளாக ஒதுக்கப்படுகின்றன.