- என்று சொல்லும் தனலட்சுமி, இன்று தனது கிராமத்தில் இருக்கும் பெண்கள் பலருக்கும் ரோல் மாடல். பல பெண்களுக்கு தனலட்சுமியைப் போல திறமையுடனும், தன்னிச்சையாகவும் இயங்க ஆசையும், கனவும் வளர்ந்திருக்கிறது. அவர்களின் கனவுகளை நனவாக்கித் தந்த பெருமையும் இன்று தனலட்சுமிக்கே! கணவனுடன் இணைந்து குடும்ப வருமானத்தில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலும் குடும்ப நிர்வாகத்தில் மட்டுமல்ல எடுத்து வைக்கும் அத்தனை அடியிலும் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலே தனலட்சுமியை இவ்விதமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தச் சிந்தனையானது தனலட்சுமியை மட்டுமல்ல அவரது கிராமத்திலிருக்கும் பல பெண்களையும் தன்னம்பிக்கையுடன் சிந்திக்க வைத்திருப்பதோடு சுயகால்களில் நிற்கவும் வைத்திருக்கிறது. இப்போது தனலட்சுமி மட்டுமல்ல அவரோடு இணைந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வெற்றிபெற்ற அத்தனை பெண்களுக்குமே அவர்களது அடுத்த இலக்கு தங்களது வாரிசுகளுக்கு அருமையான கல்வியறிவைப் பெற்றுத் தந்து அவர்களையும் சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு முன்னேற்றுவது ஒன்றே! பெண்கள் தங்களுக்கான சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்தை வெளியில் தேட வேண்டியதில்லை அது தங்களிடத்திலேயே எப்போதும் உறைந்திருக்கக் கூடிய விஷயம். அதை வெளிக்கொண்டு வரும் முனைப்பு மட்டுமே பெண்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். அந்த முனைப்பிருந்தால் வெற்றி உறுதி என்பதற்கு தனலட்சுமியும் அவரது காந்தி தன்னார்வ மகளிர் சேவை அமைப்பு உறுப்பினர்களுமே முன்னுதாரணம்.