என்னிடம் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. நான் வெகு சுமாரான வாகன ஓட்டி. சுமார் என்றால் ரூல்ஸ்படி வாகனம் ஓட்டத் தெரியாதவன் என்று நினைத்து விடாதீர்கள். அழகாக எட்டுப் போட்டுக் காட்டி, பரீட்சை எல்லாம் எழுதி பாஸ் ஆகி லைசன்ஸ் வாங்கி இருக்கிறேனாக்கும். எனக்கு நமது தமிழ்நாட்டுச் சாலைகளில் என்னுடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல நன்றாகவே தெரியும். மிதமான வேகத்தில் எங்கெங்கே இண்டிகேட்டர் பயன்படுத்த வேண்டும், வாகன விளக்குகளை எங்கே, எப்போது ஆன்/ஆஃப் செய்ய வேண்டும்? எங்கே பிரேக் அழுத்த வேண்டும்? ஸ்பீட் பிரேக்கர் வந்தால் வாகனத்தை எப்படிக் கையாள வேண்டும். எல்லாமே எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் நம்மூரில் சாலைகள்... ஈ, காக்கை இன்றி வெறிச்சோடிப் போயிருந்தாலும் கூட நான் 40 க்கு மேல் செல்வதில்லை என எனக்கு நானே சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம் இந்த ரூல் பிரேக்கர்கள். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? ஆளரவமற்ற சாலைகளில், தெருமுக்குகளில் இருந்தெல்லாம் திடீரென எப்படி ஓசையின்றி முளைத்து வந்து வண்டியை இடித்துத் தள்ளி விட்டுப் பறக்கிறார்கள்? அவர்கள் ஏன் சாலை விதிகளை மதிப்பதில்லை என்றெல்லாம் ஒரு சீக்ரெட் மிஷன் வைத்துக் கண்டுபிடித்து தொலைக்க வேண்டும். அவர்களால் தான் ஒழுங்காக லைசன்ஸ் வாங்கி வண்டி, வாகனங்களை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் கூட பீதியடைந்து பயந்து பயந்து வண்டியோட்ட வேண்டியதாயிருக்கிறது.