இந்தக் கேள்விக்கு, இந்தியப் பெற்றோரில் பலர் எடுத்ததுமே; நிர்தாட்சண்யமாக ‘இல்லை... ஒருக்காலும் இல்லை’ என்று பதிலளிக்கலாம். உடனே அதற்குக் காரணம் சாதி வெறி, மத வெறி என்று முடிவு கட்டாதீர்கள் அவசரக் குடுக்கைகளே! பயம், இதுவரை தாங்கள் அனுசரித்து வந்த பழக்க வழக்கங்களுக்கு முற்றிலும் வேறான பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகளைக் கொண்ட மற்றொரு சாதியை, மதத்தைச் சேர்ந்த மணமகனையோ, மணமகளையோ எப்படி ஏற்றுக் கொள்வது? காதலால் இணைந்தவர்கள் திருமண வாழ்வின் பின் சேர்ந்து வாழும் போது ஒருவரையொருவர் அனுசரித்து சண்டை சச்சரவின்றி மனக்கசப்பின்றி வாழ முடியுமா? என்ற பயமும், சந்தேகமும், தயக்கங்களும் தான் எடுத்த எடுப்பில் பெரும்பாலான பெற்றோரை காதல் திருமணம் என்றதுமே அதற்கு மறுப்புத் தெரிவிக்க வைக்கிறது.