பெங்களூரு தெருக்களில் எமராஜன் வேடத்தில் நடமாடிக் கொண்டும், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கக் கூடியவர்களை வாலண்டியராக இழுத்துப் பிடித்து நிறுத்தி ஹெல்மெட்டின் அத்யாவசியம் குறித்து விளக்கு, விளக்கென்று விளக்கி அதை அறியாமல் சுற்றுவதின் பின்னுள்ள அலட்சியத்தையும் அதன் பின் விளைவையும் எடுத்துக்கூறி தன் எமராஜன் வேலையைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் வீரேஷ் முட்டினமத். யார் இந்த இளைஞர்? இவருக்கு எதற்கு இந்த வேலை என்று சிலருக்குக் கேட்கத் தோன்றலாம். அந்த இளைஞர் சில கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார். அவருக்கு நடிப்பு தான் எல்லாமும். நடிப்பின் மேலிருந்த ஆசையின் காரணமாகத் தனது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவராகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீரேஷுக்கு நடிப்பு என்றால் உயிர். சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமா தான் ஒரே லட்சியம் என்பதால் அதற்காக பெரும் பிரயத்தனத்துடன் முயன்று கொண்டிருக்கிறார். இடையிடையே மேடை நாடகங்கள் மற்றும் சீரியல்களில் தோன்றவும் மறுப்பதில்லை.