சென்னை வளசரவாக்கத்தில் கடந்த வாரம் மழை பெய்து ஓய்ந்த ஒரு காலை நேரத்தில் கீதா கண்விழிக்கையில் நேரம் சற்றுப் பிந்தித்தான் விட்டது. முதல் நாளில் நல்ல மழை என்பதால் அந்தப் பகுதியில் மின்சாரம் தடைபட்டிருந்தது. இதனால் இரவில் தடைபட்ட மின்சாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து, காத்திருந்து ஓய்ந்த பின் இரவு வழக்கமான நேரம் கடந்து கீதாவும், அவரது மகள் ஷாலினியும் தாமதமாகத்தான் தூங்கச் சென்றிருக்கிறார்கள். இதனால் காலையில் கீதா விழித்தெழ சற்று நேரமாகியிருக்கிறது. அப்போது அக்கம்பக்கத்தில் பலமான பேச்சுக்குரல் கேட்டு யாரோ, என்னவோ என்று வெளியில் பதறி ஓடி வந்த கீதா... தன் மகளும் அந்தத் தெருவிலிருந்த பிற அண்டைவீட்டாரும் வீட்டின் முன்னிருந்த சிக்கலான ஒரு கழிவுநீர் குழாய்ச் சந்திப்பின் முன் பதற்றத்துடன் திரண்டிருந்ததைக் கண்டார். அங்கே... ஆளாளுக்கு கழிவுநீர்க் குழாய்க்குள் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது... குழந்தை சிக்கிக் கொண்டது என்பது போன்ற பேச்சுக் குரல் காதில் விழுந்ததும் கீதாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. திரண்டிருந்த மக்களில் யாருக்கும் குனிந்து உள்ளே மாட்டிக் கொண்டிருந்த சிசுவை வெளியில் எடுக்கும் மன தைரியம் இல்லாத நிலையில், இனிமேலும் தாமதித்தால் உள்ளிருக்கும் குழந்தைக்கு பெரிய ஆபத்து என்று உணர்ந்த கீதா. அப்படியே சாலையில் படுத்து கழிவுநீர் குழாய்க்குள் கையை விட்டார். மிகச்சிறிதான அந்த துவாரத்தில் குழந்தை கிடைமட்டமாக சிக்கியிருப்பதை இப்போது கீதாவுக்கு புலனானது. உள்ளிருந்த சேற்றுக்குள் தன் கைகளைப் பதித்து குழந்தையின் உடலைப் பதமாகக் பிடித்து மெதுவாக இழுத்தார் கீதா. குழந்தை வெளியில் வந்தது.