பக்கத்து வீட்டுப் பெண் அடிக்கடி கூறுவார். தன் 5 வயது மகனை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு காரோட்டுவது தனக்கு மிகச்சிரமமான காரியம் என்று. பையன் படு சுட்டி. அம்மாவைக் கார் ஓட்டவே விடாது, தானே காரை இயக்குவேன் என்று படு பயங்கரமாக அடம்பிடிப்பானாம். இதைச் சொல்லி விட்டு ஆளில்லாத மைதானம் அல்லது குடியிருப்பு வளாகச் சாலைகள் என்றால், அவனது பிடிவாதத்தை சமாளிக்க முடியாமல் தான் எப்போதோ ஒரு முறை அவனிடம் காரை இயக்கச் சொல்லி அனுமதித்ததால் அவன் அதே நினைவில் எப்போது காரில் தன்னுடன் வந்தாலும் இப்படித்தான் அடம்பிடிக்கிறான். அவனது அப்பா என்றால் ஒரே மிரட்டலில் அடங்கி விடுவான். நான் என்றால் விடாமல் நச்சரித்தும், அழுது அடம்பிடித்தும் காரியத்தைச் சாதிக்கப் பார்ப்பான் என்றும் கூறிக் கொண்டிருந்தார். சொல்லும் போது அவரது தொனியில் பையனின் செயலைப் பற்றிய அச்ச உணர்வையும் மீறி பெருமித உணர்வு மிகுந்திருந்தது. அட! எம்பையனாக்கும், 5 வயசுக்குள்ள பாருங்க, விட்டா அவன் காரே ஓட்டுவானாக்கும்! என்பது மாதிரியான பெருமிதம் பொங்கி வழிந்தது.