இவர் தான் பள்ளிக்குத் தலைமை ஆசிரியரும் கூட, அதோடு சேர்த்து எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்தார். இவரைப் பெயரைக் குறிப்பிட்டு சார் என்று சொல்வதில்லை, பொதுவாக ஹெட்மாஸ்டர் என்றே குறிப்பிடுவது வழக்கம். ஆங்கிலம் கற்பிப்பது என்றால் அவரைப் பொறுத்தவரை, ஆங்கிலப் பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு டெஸ்க் வாரியாக ஒவ்வொரு மாணவ, மாணவியாக பாடத்திலிருக்கும் ஒவ்வொரு பத்தியாக வாசித்து முடிக்கச் சொல்வதே தவிர வேறில்லை. மற்றபடி இந்த ஆங்கில இலக்கணம், துணைப்பாட நூல் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவே மாட்டார். இவருக்குப் பதிலாக போத்திராஜ் சார் வந்து ஆங்கில இலக்கணம் கற்றுத் தருவார். அவருக்கும் அப்போதிருந்த நிலையில் ஆங்கில இலக்கணம் என்றால் அது பிரசண்ட் டென்ஸ், பாஸ்ட் டென்ஸ், ஃபியூச்சர் டென்ஸ் தாண்டி அதனுள் உள்ளடக்கமான சிம்பிள் பிரசண்ட் டென்ஸ் தொடங்கி ஃபியூச்சர் பெர்ஃபெக்ட் கண்டினியூஸ் டென்ஸ் வரை மட்டுமே. இதையே வருடம் முழுக்க கரும்பலகையில் எழுதிப்போட்டு மனப்பாடம் செய்வித்துக் கொண்டே இருந்தார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் அறிந்து கொண்ட ஆங்கில இலக்கணம் இவ்வளவே!