அனிதா, தன் பெற்றோர்களின் ஒரே செல்ல மகள். அவளது பெற்றோருக்கு அளவற்ற செல்வம் இருந்தது. கூடவே அளவற்ற மூடநம்பிக்கையும் இருந்தது. யாரோ ஒரு ஜோசியர்... மகளுக்குத் திருமணம் ஆனால் அப்பாவுக்கு மரண யோகம் என்று புரளியைக் கிளப்பி விட்டு வகை, தொகையின்றி பரிகாரங்களைச் செய்யச் சொல்லி பணம் பிடுங்குவதை வழக்கமாக்கி இருந்தார். இதை அறியாத அளவுக்கு அனிதாவின் பெற்றோர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனாலும் மரண பயம் பிடித்து ஆட்டுவித்ததில் அப்பா, மகளுக்குத் திருமணப் பேச்சு எடுத்தாலே... ஏதோ ஒரு காரணம் சொல்லி மருத்துவமனையில் அட்மிட் ஆக ஆரம்பித்தார். அழகான அனிதாவுக்கு அவளது இளமையெல்லாம் திருமணமானால் அப்பா, உயிரோடு இருப்பாரா? இல்லையோ? என்ற பதட்டத்திலேயே கழிந்தது. வரும் வரன்களை எல்லாம் அவளது அப்பா வீட்டினரே தட்டி விட அழகிருந்தும், படிப்பிருந்தும், அளவற்ற நகைகளும், பணமும் இருந்தும் அனிதாவுக்கு திருமணமே ஆகவில்லை. 41 வயதிலும் திருமணமாகாத அனிதா, ஒரு பியூட்டி பார்லரில் தன் நரை முடிக்கு டை அடித்துக் கொள்ள வந்திருக்கையில் பக்கத்து இருக்கையிலிருந்து எதேச்சையாக அவளைத் திரும்பிப் பார்த்த பால்யகாலத் தோழி ஒருத்தி உனக்கென்ன குறை என்று இப்படி ஆனாய்?! என மனமுடைந்து அழுதாள். அப்போது அனிதாவின் அப்பா இயல்பான வயோதிகத்தால் உடல் நலமின்றி இறந்து போய் 3 ஆண்டுகள் ஆகியிருந்தன. தொடர்ந்து அம்மாவும் அடுத்த வருடத்தில் காலமாகி விட... இப்போது அனிதாவுக்குத் திருமணம் செய்து கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால் திருமணம் செய்து வைக்கத் தான் யாரும் இல்லை. விரக்தியில் அனிதாவுக்கு திருமண வாழ்வில் நாட்டமின்றி, லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை ஆதரித்து அலுவலக நண்பர் ஒருவருடன் வாழத் தொடங்கி விட்டாள்.