தக்ஷின சித்ராவுக்குள் நாம் வீட்டிலிருந்து சமைத்து எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. சிறுவர்களுக்காக ஸ்னாக்ஸ்களும், தண்ணீர் பாட்டில்களும் வேண்டுமானால் உள்ளே கொண்டு செல்லலாம். மற்ற்படி உள்ளேயே இயங்கும் உணவகத்தில் சுவைக்கேடின்றி அருமையான மதிய உணவு கிடைக்கிறது. மீல்ஸ் ஒரு நபருக்கு 150 ரூபாய்கள். இரண்டு வகை காய்கறிப் பொரியல், சப்பாத்தி, கிரேவி, காரக்குழம்பு, சாம்பார், ரசம், தயிர், பாயஸம், அப்பளம், ஊறுகாய் என ஒரு கட்டு கட்டலாம். சின்ன ரெஸ்டாரெண்ட் தான் என்றாலும் நன்றாகவே பராமரிக்கிறார்கள். மதிய உணவாக மீல்ஸ் மட்டுமில்லை சப்பாத்தி, பரோட்டா கூட கிடைக்கிறது. மாலைச் சிற்றுண்டியாக பஜ்ஜி, வடை, போண்டாக்கள் கூட உண்டு. நல்ல காஃபீ, டீ, பழரசங்களும் உள்ளேயே கிடைக்கின்றன. விலை மற்றும் சுவையுடன் சேர்த்து நகரத்தின் பிற உணவகங்களோடு ஒப்பிடும் போது ஓரளவுக்கு கட்டுப்படியாகக் கூடிய ரகத்தில் தானிருக்கிறது. உள்ளேயே ஐஸ் கிரீம் பார்லர் மற்றும் பழரசங்களுக்கு எனத் தனி அங்காடியும் உண்டு. எல்லா இடங்களிலும் ரசித்து அமர்ந்து உண்ண விஸ்தாரமான இட வசதியும் இருக்கிறது.