பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களின் வெற்றியே; தமது துயரத்தின், அவமானத்தின் பின்னரும் வெற்றி கரமாக வாழ்ந்து காட்டுவதில் தான் உள்ளது. அதற்கான நியாயமான உதவிகளைச் செய்து தரும் முனைப்பில் உருவானது தான் ‘ஜுவாலா’ அமைப்பு, சுருக்கமாகச் சொல்வதென்றால் JFJ (Jwala for justice). இதன் நிறுவனர் டாக்டர். திவ்யா குப்தா. இந்தூரைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான திவ்யா 2012 ஆம் ஆண்டில் கெளகாத்தி சிறுமி ஒருத்தியை ஒரு மதுபான விடுதியின் முன் 30 மனித மிருகங்கள் சேர்ந்து சீரழித்த கொடூரமான செய்தியை ஊடகங்கள் வழியாக அறிந்தார். அன்று அவரது இதயம் சுக்கு நூறானது. ஒரு சிறுமியை 30 பேர் பலாத்காரம் செய்வது எனில் அது என்ன மாதிரியான வக்கிரம்?! அதைத் தட்டிக் கேட்க ஒரு மனித ஜீவன் கூட அந்த இடத்தில் இல்லை எனில் அது என்ன மாதிரியான நியாயமற்ற, ஈவு இரக்கமற்ற உலகம். என திவ்யாவை அந்தச் செய்தி கொந்தளிக்கச் செய்தது. அந்த கொந்தளிப்பில் உருவானது தான் திவ்யாவின் ஜுவாலா அமைப்பு. இது முற்றிலும் பாலியல் வன்முறையால் தினம் தினம் பாதிக்கப்பட்டு அதை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாமல், நீதி கிடைக்காமல் தவிக்கும் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான அமைப்பு. தனது ஜுவாலா அமைப்பின் முதல் செயல்பாடாக திவ்யா சுட்டுவது கெளகாத்தி சிறுமிக்காக நடத்திய மெளன யாத்திரையைத் தான். அந்தச் சிறுமிக்கு நீதி வேண்டி ஒரு குழுவாக ஜுவாலா அமைப்பினர் ஊர்வலம் சென்றனர். அது தான் இவர்களது நியாயப் போராட்டத்திற்கான முதல் அடி!