திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

'டாக்ஸிக்' உறவில் இருக்கிறீர்களா? தெரிந்துகொள்வது எப்படி? என்ன செய்ய வேண்டும்?

மன உளைச்சலை ஏற்படுத்தும் 'டாக்ஸிக்' உறவுகள் பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :2 பிப்ரவரி 2026, 10:18 am

ஒவ்வாத, மன உளைச்சலை ஏற்படுத்தும் டாக்ஸிக் உறவுகளைக் கண்டறிதலும் அவற்றைச் சரிசெய்யும் முயற்சிகளும்...

ஒவ்வொருவருக்குமே உறவுகள் என்பது இந்த காலத்திலும் அவசியமானதாகவே இருக்கிறது. இங்குள்ள ஒவ்வொருவரும் யாரையோ ஒருவரைச் சார்ந்துதான் வாழ்கிறார்கள். குடும்ப உறவினர்கள் இல்லை என்றால் சிலர் நண்பர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். யாருடைய உதவியும் இன்றி தனித்து வாழ்வது என்பது அபூர்வம்தான்.

ஆனால் சிலரைப் பிடிக்காத சூழ்நிலையில்கூட தன்னுடைய நண்பர், தன்னுடைய உறவினர் என்ற ஒரே காரணத்தால் அவர்களுடன் நட்பு பாராட்ட வேண்டிய நிலை இருக்கிறது. உறவுகளிலும் 'டாக்ஸிக்' என்று சொல்லக்கூடிய நமக்கு ஒவ்வாத உறவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இது கணவன் - மனைவி, காதலன் - காதலிக்கும் பொருந்தும்.

திருமணம் ஆனவர்கள் பலரும் தங்கள் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் 'விவாகரத்து' என்பதைத் தவிர்த்து வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உறவினர், நண்பர், துணை என சிலர் வேறு வழியின்றி டாக்ஸிக் உறவில் இருக்கிறார்கள். ஒரு சிலர் இது 'டாக்ஸிக் உறவு' என்பது தெரியாமலேயே இருக்கின்றனர்.

எப்படி தெரிந்துகொள்வது?

இப்படியான ஒவ்வாத, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டாக்ஸிக் உறவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?

1. உங்கள் நண்பர் அல்லது துணை, ஒருவருடன் இருக்கும்போது அல்லது அவரைச் சந்திக்க முற்படும்போது நீங்கள் ஒரு பதட்டத்திலேயே இருப்பீர்கள். அவர்களிடம் உண்மையைக் கூற நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள். அவர்களிடம் வெளிப்படையாக எதையும் சொல்வதற்கு உங்களால் முடியாது. அந்த சூழ்நிலை இருந்தால் அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்.

2. உங்களுடன் இருப்பவர் மிகவும் சுயநலமாக இருப்பார். உங்கள் மேல் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார். உங்களுடைய தேவைகள், ஆசைகளை நிறைவேற்ற முயற்சிக்கமாட்டார். உங்கள் நலனில் அவருக்கு அக்கறை இருக்காது.

3. உங்களுடன் அனைவரும் இருந்தும் நீங்கள் தனிமையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

4. உங்களுக்கான மரியாதை, உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போவது.

5. உங்களுடைய கருத்துகள் சரியாக இருந்தாலும் அதை மதிக்காமல் உங்களை தாழ்த்திப் பேசுவது,

6. அவமரியாதை செய்வது, தொடர்ந்து கேள்வி கேட்பது, விமர்சனம் செய்வது.

7. உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தும் இழிவான சொற்களை தொடர்ந்து பயன்படுத்துவது, சில உறவுகளில் அடித்து துன்புறுத்துவது.

8. நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள்? என விடாமல் தொடர்ந்து கண்காணிப்பது, அதுபற்றி கேள்வி கேட்டு மனரீதியாக துன்புறுத்துவது.

9 உங்களுடைய முடிவுகளையும் சேர்த்து அவர்களே எடுப்பது.

10. ஒட்டுமொத்தமாக உங்களுடைய உணர்வுகளைச் சற்றும் மதிக்காமல் அன்பு, பாசம் இன்றி உங்களின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கும் நிலை இருந்தாலோ, அதுபோன்றவர்களிடம் நீங்கள் நீங்களாக இருக்க முடியாமல் இருந்தாலோ அது டாக்ஸிக் உறவுதான்.

Story image

ENS

என்ன செய்ய வேண்டும்?

யாராக இருந்தாலும் அவரவருக்கான வரையறைகளை நிர்ணயிக்க வேண்டும். உங்களுடைய சுயமரியாதையை யாரிடமும் விட்டுக் கொடுக்க கூடாது.

அந்த உறவு உங்களுக்கு தேவை என்றால், அதைவிட்டு உடனடியாக விலக முடியாது என்றால், உங்களுடைய உணர்வுகள் புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை அவரிடம் எடுத்துக்கூறி 'உங்களுடைய அன்பு தேவை, இப்படியெல்லாம் இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்தலாம். பல முயற்சிகளுக்குப் பின்னரும் அவரின் நடத்தையில் மாற்றம் ஏற்படாதபட்சத்தில் அவரை விட்டு விலக முயற்சிப்பது உங்களுடைய உடல், மன நலனுக்கு நல்லது.

அந்த உறவு வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக அவரும் தன்னை மாற்றிக்கொள்ள முற்படுவார். எனவே, அதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

உண்மையான அன்பிற்கு விட்டுக்கொடுப்பது சரியானது. ஆனால் இதுபோன்ற உறவுகளை சகித்துக்கொண்டு வாழ்வது சரியல்ல, உங்களுடைய உடல் மற்றும் மன நலத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றே மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற உறவுகளில் இருந்து வெளியே வந்த பின்னர் நீங்கள் ஒரு சுதந்திரமான மனநிலையைப் பெற முடியும் என்கிறார்கள்.

அந்த உறவு கண்டிப்பாக தொடர வேண்டும் என்று நினைக்கும்பட்சத்தில் இருவரும் மன நல ஆலோசகரை அணுகுவது நல்லது. நீங்கள் கடுமையான மன அழுத்தத்தில் அல்லது குழப்பத்தில் இருந்தாலும் ஒரு மன நல ஆலோசகரை அணுகி முடிவெடுப்பது நல்லது.

பெண்களாக இருந்தால் நிதி சார்ந்து சுயமாக சம்பாதிப்பது, சுய முடிவு எடுப்பது ஆகியவை இதுபோன்ற உறவுகளில் இருந்து விலக, தைரியமாக முடிவெடுக்க உதவும்.

எந்த சூழ்நிலையிலும் தனித்து செயல்பட, எந்தவொரு சூழ்நிலைகளையும் சமாளிக்க உங்களை வலிமையாக்கிக் கொள்ளுங்கள்.

டாக்ஸிக் உறவில் இருந்து வெளியே வந்தபின்னர் உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொள்ளவும் சரிபடுத்திக்கொள்ளவும் வேண்டும். கணவன் - மனைவி உறவு தவிர மற்ற உறவுகளில் இருந்து வெளியே வருவது எளிதானது. திருமணமான பெண்களும் ஆண்களும் இதுபோன்ற உறவில் சிக்கிக்கொண்டு தவறான முடிவு எடுக்கிறார்கள். பிரச்னைகளை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும், தவிர தவறான முடிவெடுப்பதைவிட அந்த உறவில் இருந்து விலகிவிடுவது நலம்.

டாக்ஸிக் உறவில் இருந்து விடுபடுவது உங்களுடைய மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கைக்கு நீங்கள் எடுக்கும் முயற்சியாகும். அதனால் ஒரு உறவை இழக்கிறோம் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். நல்ல உறவுகள் பலவும் உங்களைச் சுற்றி இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Things to to identify and avoid toxic relationship

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.