இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் ஒரு தாய் மற்றும் ஒன்றைரை வயதுக் குழந்தையொன்றின் சடலம் காண்போர் நெஞ்சை சுக்கு நூறாக உடைந்து போகச் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய சோகத்தை உள்ளடக்கியதாக இருந்தது. இருவரது சடலமும் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட போது, அந்தச் சூழலிலும் அந்த தாயின் கரங்கள் தன் மகனின் பிஞ்சுக் கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தன. மரணத்தின் போது பாதுகாப்புக்காகப் பிணைந்த கரங்கள் மரணித்து இரண்டு நாட்களாகியும் தன் மகனை விட்டுப் பிரியாதது பார்ப்போரை கலங்கடிப்பதாக இருந்தது. நிலச்சரிவில் இறந்த அம்மா கீதுவுக்கு 21 வயது. இவரது கணவர் சரத் காயங்களின்றி உயிர் தப்பி விட்டார். ஆயினும் சரத்தின் அம்மா சரோஜினியும் கூட இந்த நிலச்சரிவில் உயிரிழந்தார் என்பது வருத்தமான செய்தி. மாமியார், கணவர், கீது, அவர்களது ஒன்றைரை வயதுக் குழந்தை என நால்வரை உள்ளடக்கிய இவர்களது குடும்பம் கோட்டகுன்னு பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்தது.