இந்தியாவின் தேசிய விலங்கு அங்கீகாரம் பெற்றிருக்கும் வங்கப்புலிகள், கறுஞ்சிறுத்தைப் புலிகள், வெண் புலிகள், சிறுத்தைகள், மான்கள், ஏனைய பிற வனவிலங்குகளை வேட்டையாடுதலோ அல்லது அவற்றின் உயிருக்கு ஊறு விளைவித்தலோ தண்டனைக்குரிய குற்றமாக இந்தியாவில் கருதப்படுகிறது. காரணம் அவற்றின் அருகி வரும் எண்ணிக்கை. உயிர்ச்சமநிலையை நிலைநிறுத்த காடுகளில் வெவ்வேறு விதமான வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறிப்பிட்டத்தக்க அளவில் சராசரியாக நீடிக்கப் படவேண்டும். ஆனால், விலங்குகளின் தோல், பற்கள், நகங்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுக்காக விலங்குகளை வேட்டையாடுதல், பருவநிலை மாறுபாடுகள், காடுகளை அழித்து விளைநிலங்களாகவும், மக்களுக்கான வாழிடங்களாக அவற்றை மாற்றும் முயற்சி, போதிய மழையின்மை, வன வறட்சி, உள்ளிட்ட காரணங்களால் அரிதான பல விலங்குகளின் எண்ணிக்கை கவலைக்குரிய வகையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தன. அவற்றின் இந்த கருஞ்சிறுத்தைபுலிகளின் எண்ணிக்கை முற்றிலுமாக ஒதிஷா காடுகளில் இருந்து அழிந்து விட்டது என்றே கடந்த 26 ஆண்டுகளாகக் கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது அவற்றின் இருப்பு வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேமிராப் பதிவுகளின் வாயிலாக தெரிய வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாக அம்மாநில வனத்துறையினரால் கருதப்படுகிறது.