கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவின் பேரில் மைசூர் காவல்துறையில் புதிதாக ‘டூரிஸ்ட் போலீஸ்’ என்றொரு பிரிவு துவக்கப்பட இருக்கிறதாம். ஆண்டு தோறும் மைசூரு அரண்மனை, மைசூரு விலங்கியல் பூங்கா, சாமுண்டி ஹில்ஸ் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மைசூரு அரண்மனையைப் பார்வையிட மட்டும் ஆண்டொன்றுக்கு 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். அதற்குச் சற்றும் குறையாமல் மைசூர் விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். விழாக்காலங்களில் மைசூரு சாமுண்டி ஹில்ஸ் கோயில் பகுதியில் நிலவும் நெருக்கடியோ சொல்லி மாளாது. லட்சக்கணக்கான மக்கள் சாமுண்டீஸ்வரியின் தரிசனம் காண வந்து செல்கிறார்கள்.