பாகுபலி வெறும் திரைப்பட நோக்கில் மட்டுமே படமாக்கப்பட்டிருந்தால் மக்கள் இந்தப் படத்தையும் முந்தைய வெற்றிப்படங்களைப் போலவே மறந்து போயிருக்க கூடும். ஆனால் பாகுபலி தனது திரைப்படம் என்ற எல்லையை வெகு எளிதாகத் தாண்டி சிறுவர்களுக்கான கதையாடலாகவும் பரந்து விரிந்ததில் அதற்கான வியாபார வாய்ப்புகளும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. முதலில் சர்வதேச அளவில் படத்தைக் கொண்டு செல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிரதான இந்திய பிராந்திய மொழிகள் தாண்டி சீனாவில் படம் வெளியிடப்பட்டது. உலகில் அதிக மக்கள் தொகை நாடுகளில் முதலிடம் சீனாவுக்கே. அங்கே படம் வெற்றியடைந்தது.