உத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்த்ர ராவத், பொதுமக்களைச் சந்திக்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியில், திடீரெனத் தோன்றிய ஆசிரியை உத்தர பஹுகுனா, தனது பணியிட மாறுதல் குறித்துக் கேள்வி எழுப்பியதில் வெகுண்ட முதல்வர். அதெல்லாம் பேச இது இடமில்லை. அதற்கென பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் இருக்கிறது. அதற்கென ஒரு செயலர் இருக்கிறார். நீங்கள் ஒரு ஆசிரியையாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் பிஹேவ் செய்யாதீர்கள் என்று எச்சரித்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக ஆசிரியை, நானொன்றும் இந்த வேலைக்காக என் வாழ்நாள் முழுவதையும் வனவாசத்தில் கழிக்கிறேன் என்று சபிக்கப்படவில்லை. என் கணவரும் இறந்து விட்ட நிலையில் டேராடூனில் வசிக்கும் என் பிள்ளைகளை விட்டு விட்டு மீண்டும் அந்த வனப்பகுதி பள்ளிக்கு என்னால் பணிக்குச் செல்ல முடியாது. பல்லாண்டுகளாக நான் பணியிட மாறுதலுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன், நீங்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. எனக்கூறினார். இதைக் கண்டு வெகுண்ட முதல்வர் உடனடியாக காவல்துறை அதிகாரிகளை நோக்கி, முக்கியமான நிகழ்வான முதல்வரின் மக்கள் சந்திப்பில் தடங்கல் ஏற்படுத்திய குற்றத்துக்காக உடனடியாக இவரைக் கைது செய்து சிறையிலடையுங்கள், இவரது வேலையை சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று கோபத்துடன் உத்தரவிட்டார். தனது நியாயமான கோரிக்கைக்கு முதல்வர் செவி சாய்க்காததோடு, மேலும் தன்னைக் குற்றவாளியாக்கி சிறையிலடைக்கவும் உத்தரவிட்டதில் ஆத்திரமுற்ற ஆசிரியை உத்தர பஹுகுனா, அங்கிருந்து வெளியேறுகையில், முதல்வரை நோக்கி, ‘திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள்’ என்று கூறிக் கொண்டே வெளியேறினார்.