கோயம்பத்தூர்: அண்மையில் வெளியான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி, தர வரிசைப் பட்டியலில் தான் முதலிடம் பெற்றிருந்தாலும் தனக்கு இளங்கலை வேதியியல் பாடத்தில் இணைந்து படிக்கவே விருப்பம் எனக் கூறியிருப்பது ஆச்சர்யப் படத்தக்க விஷயம். வியாழனன்று வெளியான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா (18) முதலிடம் பெற்றிருந்தார். முதலிடம் பெற்றது சந்தோஷத்திற்குரிய விஷயமாக இருந்த போதும் மாணவி கீர்த்தனா பொறியியல் கல்லூரியிலோ, பல்கலைக் கழகங்களிலோ சேர்ந்து கற்கும் விருப்பம் தனக்கு இல்லையென்றும் தான் டெல்லி, செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை வேதியியல் கற்கவே விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். முதலில் அண்ணா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பொறியியல் படிக்கும் நோக்கம் இருந்ததால் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகவும் ஆனால், இப்போது வரை தனது ஆர்வம் இளங்கலை வேதியியல் படிப்பையே நாடுவதால் தான் டெல்லி கல்லூரியில் சேர்ந்து படிக்கும் விருப்பத்துக்கே முன்னுரிமை தரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.