மழை வேண்டி வருணனையும், இந்திரனையும் துதிப்பதும், அவர்களை மகிழ்விக்க யாகங்கள் நடத்துவதும் வேதகால நாகரீகத்தின் போது பின்பற்றப்பட்ட பழக்கங்களில் ஒன்று. இப்போதும் அந்தப் பழக்கம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அப்படி பெரும்பொருட்செலவுடன் யாகங்களை நடத்துபவர்கள் செல்வந்தர்களாகவும், அரசியல்வாதிகளாகவுமே இருப்பார்கள். சாதாரண மக்களில் யாரும் இப்படி யாகங்கள் நடத்துவதில்லை என்றாலும் அவர்களுக்கும் அப்படியான நம்பிக்கைகள் பலமாகவே இருக்கின்றன. மக்களில் சிலர் கழுதைகளுக்குத் திருமணம் செய்வதும், தவளைகளுக்குத் திருமணம் செய்வதும். ஏன் சில இடங்களில் எறும்புகளுக்குக கூட திருமணம் செய்விக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம்... மக்களது நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இவையெல்லாம். மக்கள் ஏன் இப்படியான விஷயங்களை எல்லாம் நம்புகிறார்கள் எனில், ‘நீரின்றி அமையாது இவ்வுலகு’ என்பதால் தான். மழையின் அத்யாவசியம் அப்படிப்பட்டதாக இருப்பதால்... மழை பொய்த்துப்போனால், வராத மழையை கட்டி இழுத்துக் கொண்டு வர வைக்கவே இத்தகைய உத்திகளை அவர்கள் கையாள்கிறார்கள்.