ஒவ்வொருநாளும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளைப் பதிவு செய்வதற்கும், தீர்ப்புகளை அச்சில் வெளியிடுவதற்கும், நீதிமன்றம் சார்ந்த பல்வேறு கோப்புகளையும், தஸ்தாவேஜுகளையும் உருவாக்கவும் தேவையான காகிதங்களைத் தயாரிக்க 20 மரங்கள் வரை ஆயுளை இழந்து கொண்டிருந்தன. கடந்த மாதத்தில் உச்ச நீதிமன்ற நிர்வாக விவகாரங்களுக்கான கவுன்சில் குழுவினருடனான பேச்சுவார்த்தைகளின் போது இன்றிலிருந்து இனி 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற விவகாரங்களில் காகிதங்கள் பயன்படுத்தப் பட மாட்டாது என அறிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ஜெ எஸ் கேஹர். தலைமை நீதிபதியின் உத்தரவு தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை இனிமேல் காகித பண்டில்களுடனான உறவு என்பது பழங்கதை ஆகப்போகிறது. குவியல், குவியலாக காகிதக் கட்டுகளும், வழக்கு வரலாறுகள் வெளியிடப்படும் அச்சுக் காகிதங்களுமாக காட்சி அளிக்கும் நீதிமன்ற வளாகம் இனி முழுவதும் டிஜிட்டல் மயமாகவிருக்கிறது. அதற்கான முன் நடவடிக்கையாகத் தான் இந்த 6 மாத வெள்ளோட்டம்.