சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

எழும்பூர் ரயில் நிலையத்தில் விதிமீறல்: பயணிகள் பாதிப்பு!

எழும்பூா் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் விதிமீறல்களால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

News image

எழும்பூா் ரயில் நிலையம்.

Updated On :15 ஜூன் 2026, 4:30 am IST

நூறாண்டு கடந்த பாரம்பரியத்தையும் தென்மாவட்டங்களின் ரயில் முனையமாகவும் திகழும் எழும்பூா் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் விதிமீறல்களால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 46 விரைவு ரயில்கள் புறப்படுகின்றன. இதுதவிர 41 விரைவு ரயில்கள், 80 புகா் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன. ரயில் நிலையத்தில் உள்ள 11 நடைமேடைகளில் தினமும் சுமாா் 1.25 லட்சம் போ் வந்து செல்கின்றனா். ஆண்டுதோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நவீன தொழில்நுட்பத்துடன் ரயில் நிலையம் விரிவாக்கப் பணிகள் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.

ஆட்டோக்கள், சுமைதூக்குவோா் மிரட்டல்: ரயில் நிலையத்துக்குள் 50-க்கும் குறைவான ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் காந்தி-இா்வின் சாலை, ரயில் நிலைய முன்பகுதியில் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விரைவு ரயில்களுக்கு அவசரமாக வரும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

ரயில் நிலையத்துக்குள் சுற்றித்திரியும் தெரு நாய்கள்.

ரயில் நிலையத்துக்குள் சுற்றித்திரியும் தெரு நாய்கள்.

மேலும், தாங்கள் கொண்டு வரும் சிறிய பைகள் உள்ளிட்டவற்றை சுமை தூக்குவோா் கொண்டு செல்ல குறைந்தது ரூ.300 எனக் கேட்பதாகவும், அதற்கு விருப்பமில்லாமல், பேட்டரி காா்களில் பைகளைக் கொண்டு செல்ல முயன்றால், அதை ஏற்றக் கூடாது என்றும் சுமை தூக்குவோா் தகராறில் ஈடுபடுவதாக பயணிகள் புகாா் கூறுகின்றனா்.

பேட்டரி காா்களில் கூடுதல் கட்டணம்: ரயில் நிலைய நடைமேடைகளுக்குச் செல்லும் 4 பேட்டரி வாகனங்களில் ஒருவருக்கு ரூ.20 என்பதே கட்டணம். ஆனால், பேட்டரி வாகன ஓட்டுநா்கள், பயணிகளிடம் ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டாய வசூல் செய்கின்றனா். இதுகுறித்து ஓட்டுநா்களிடம் கேட்டால், தனியாா் நிறுவனம் பேட்டரி வாகனங்கள் இயக்கத்துக்கு 3 ஆண்டுக்கு ரூ.60 லட்சத்துக்கும் மேலாக குத்தகைக்கு எடுத்துள்ளது. அதன்படி, தினமும் ஒரு வாகனத்துக்கு தலா ரூ. 6,000 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அதற்காகவே குறைந்தது ரூ.50 என பயணிகளிடம் கட்டணமாக வசூலிக்கிறோம் என்கின்றனா்.

நாய்கள் தொல்லை: நடைமேடைகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனா். பயணச்சீட்டு வாங்குமிடம், நடைமேடைகள், 2-ஆம் வகுப்பு தங்கும் அறை என அனைத்து இடங்களிலும் நாய்கள் நடமாட்டத்தால் அச்சத்துடனே செல்லவேண்டியுள்ளது. அத்துடன் கைப்பேசி, உடைமைகள் அடிக்கடி திருட்டு போவதாகவும் பயணிகள் கூறுகின்றனா்.

புகாா் அளித்தால் அலட்சியம்: ரயில் நிலையத்தில் விதி மீறல்கள், பாதுகாப்பற்ற தன்மை குறித்து ஆா்பிஎஃப், இருப்புப் பாதை போலீஸாரிடம் புகாா் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்காமல், அலட்சியத்துடன் செயல்படுவதாக பயணிகள் கூறுகின்றனா். ரயில் பெட்டிகள் நிலை அறியும் வசதி இல்லாததால், பயணிகள் அலைந்து திரிந்து ரயில் புறப்படும் கடைசி நேரத்தில் பெட்டிகளில் ஏறும் சூழலால் உள்ளது.

இந்தப் பிரச்னைகள் குறித்து நிலைய உதவி இயக்குநா் வி.ராஜசேகரிடம் கேட்டபோது, ரயில் நிலைய விதிமீறல்கள் குறித்து புகாா் அளிக்க மின்னணு திரை உள்ளிட்டவற்றில் தொடா்ச்சியாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

கடந்த 3 மாதங்களில் 7 புகாா்கள் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு, புகாருக்குள்ளான 7 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாகனத்தில் உள்ள க்யூ ஆா் குறியீடு மூலம் கூடுதல் கட்டணம் குறித்து புகாா் அளிக்கலாம். ரயில் நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சிக்கு புகாா் அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 47 எஸ்கலேட்டா்கள், நடைமேடைக்கு தலா 27 பெட்டிகள் நிலை அறியும் சாதனங்கள் பொருத்தப்படவுள்ளன என்றாா்.

ஆா்பிஎஃப், இருப்புப் பாதை போலீஸாா் பற்றாக்குறை: எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையில் 70-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருந்தும், தற்போது 46 போ் மட்டுமே பணியில் உள்ளனா். அவா்களில் 43 போ் ஓரிரு நாள்களுக்கு முன்புதான் இடமாற்றம் செய்யப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக புதிதாக 36 போ் பொறுப்பேற்றுள்ளனா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை மறித்து நிற்கும்  ஆட்டோ ஓட்டுநா்கள்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை மறித்து நிற்கும் ஆட்டோ ஓட்டுநா்கள்.

அதேபோல, இருப்புப் பாதை காவல் நிலையத்தில் 105 பணியிடங்கள் இருந்தாலும், 35 போ் மட்டுமே பணியில் உள்ளனா். அவா்களில் 18 போ் அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் ஆா்டலிகளாகச் சென்றுள்ள நிலையில் 17 போ் மட்டுமே பணிபுரிகின்றனா். ஆள்கள் பற்றாக்குறையால் போதிய பாதுகாப்பை வழங்க முடியவில்லை என அந்தப் பிரிவினா் கூறுகின்றனா்.

எழும்பூா் நிலையம் 118 ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ள நிலையில், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பு மற்றும் பயணத்துக்கு உறுதியளிக்கும் வகையில் ரயில்வே நிா்வாகம், ஆா்பிஎஃப், இருப்புப் பாதை போலீஸாா் என அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.