ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

100 நாள்களில் தவெக அரசு: சாதனைகள், மாற்றங்கள், சவால்கள்!

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 100 நாள்களை நிறைவு செய்துள்ளது குறித்து...

TVK Government in 100 Days

100 நாள்களில் தவெக அரசு - TN CMO

Published On :18 ஆகஸ்ட் 2026, 9:15 am IST

மாற்றத்தை முன்வைத்து தமிழகத்தின் அரை நூற்றாண்டுகால இரு துருவ அரசியலைத் தகர்த்தெறிந்து 108 இடங்களில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு 100 நாள்களை நிறைவு செய்துள்ளது. ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய இந்த அரசு, பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் கொள்கை மாற்றங்களையும் முன்னெடுத்துள்ள நிலையில், நிதி மேலாண்மை, கூட்டணி ஒருங்கிணைப்பு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு சவால்களையும் எதிர்கொள்கிறது.

மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் ஜோசப் விஜய். காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், அதிருப்தி அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு கிடைத்தது. முதலில் 9 அமைச்சர்களுடன் தொடங்கிய தவெக அரசு, பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் மூலம் 35 அமைச்சர்களைக் கொண்ட முழு அளவிலான அமைச்சரவையாக உருவெடுத்தது.

கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடி

தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடி என ஜூன் 16-ஆம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இதன் பின்னணியில் புதிய நலத்திட்டங்களை அறிவிப்பதுடன், வருவாயைப் பெருக்குவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடி சிறப்புத் தொகுப்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான மூன்றாவது முறை பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் கவனம் பெற்றன. இருப்பினும், அதிகபட்ச வரம்பு நிர்ணயமின்றி, விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.

ரூ.4.72 லட்சம் கோடி நிதிநிலை அறிக்கை

ரூ.4.72 லட்சம் கோடிக்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்தது. இதில் முந்தைய ஆட்சியின் பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாக அமைந்தது. வரி, கட்டணங்களை உயர்த்தாமல் வருவாயைப் பெருக்குவோம் என அரசு உறுதியளித்துள்ள நிலையில், மின் கட்டணம் நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட சில குளறுபடிகள் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. டாஸ்மாக் மற்றும் கனிம வளம் உள்ளிட்ட துறைகளில் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

முதலீடுகள் - அறிவிப்பில் இருந்து செயலாக்கத்துக்கு...

வெற்றித் தமிழ்நாடு மாநாட்டில், ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ரூ.1,02,514 கோடி முதலீடுகள் கடந்த 3 மாதங்களில் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தொழில் திட்டங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்பட்டிருப்பதைப் போலவே, அவற்றைச் செயல்படுத்துவதிலும் வேகம் காட்டினால்தான் வேலையின்மையைக் குறைத்து, உயர்கல்வி முடித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள் - கூடுதல் கவனம் தேவை

விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் தவெக அரசுக்கு முக்கிய அரசியல் சவாலாக இருக்கும். ஆட்சிக் கவிழ்ப்பு சதி போன்ற விவகாரங்கள் அரசுக்கு அனுதாப அலையை உருவாக்கியிருந்தாலும், சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது, பெண்களின் பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தெளிவற்ற நிலை

தவெக தலைமையிலான அரசில் விசிக, காங்கிரஸ் ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. எனினும், இந்தக் கட்சிகள் இதுவரை முறையான கூட்டணியின் பெயர் அறிவிக்காமல், அரசுக்கு ஆதரவு அளித்து வருவது அரசின் நிலைத்தன்மைக்கு ஓர் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் இதுவரை திமுக ஆதிக்கத்துடன் இயங்கிய அந்தக் கூட்டணி, தற்போது திமுக இல்லாத நிலையில் எந்தக் கட்சியின் தலைமையில் அல்லது ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது என்பதில் தெளிவின்மை நீடிக்கிறது.

நிதி மேலாண்மையை வெளிப்படையாகவும், ஊழலற்ற வகையிலும் மேற்கொள்வதுடன், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவதும் முதல்வர் விஜய் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக உள்ளன. அதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியக் கோரிக்கையை நிறைவேற்றுவதும், சத்துணவு ஊழியர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் தவெக அரசின் ஏனைய சவால்கள்.

காவிரி நீர், மேக்கேதாட்டு, நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை இந்த அரசு எப்படிக் கையாளப்போகிறது என்பதும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

மொத்தத்தில், 100 நாள்களில் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் தொடக்க நடவடிக்கைகள் மூலம் புதிய அரசின் பாதை தென்படத் தொடங்கியிருக்கிறது.

ஆனால், அந்த அறிவிப்புகள் களத்தில் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதும், நிதிச் சுமையை சமாளிப்பதும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைப்பதும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுமே தவெக அரசின் அடுத்தகட்ட வெற்றியைத் தீர்மானிக்கும்.

ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் எதிரான அரசின் பல்வேறு நடவடிக்கைகள் நீதிமன்றத் தடைகள் மூலம் முடக்கப்படுவது, அரசின் சட்ட ஆலோசகர்களின் போதிய ஆலோசனை இல்லையோ எனத் தோன்றுகிறது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம் விதிமுறை மீறல்களும் நீக்கங்களும் அர்த்தமற்றவை ஆகின்றன என்பதை அரசு உணர வேண்டும்.

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்போதுதான் அரசின் திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்பதை முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.