உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தால் கன்னியாகுமரி முதல் குமுளி வரையிலான பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளன. மலையடிவார கிராம மக்கள் விழிப்புணர்வு பெற்றதன் காரணமாக வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழகம் மற்றும் கேரளத்தை உள்ளடக்கிய அகஸ்தியர் மலை நிலப்பரப்பில் உள்ள காடுகளை பாதுகாக்கும் வகையில் 2014-ஆம் ஆண்டு உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், திருநெல்வேலி வன உயிரின சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவை அகஸ்தியர் மலை நிலப்பரப்பில் அடங்கும்.
இந்தப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவுப் பகுதியில் 5 கி.மீ. தூரம் வரை உள்ள மலைக் கிராமங்களில் உலக வங்கி நிதியுதவியுடன் உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உயிர்ப் பன்மையை பாதுகாப்பதும், மலையடிவார கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுமே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். இதன் மூலம் மலையடிவார கிராம மக்களின் உதவியோடு வனப்பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கிராம வனக்குழு: இத்திட்டத்தின் செயல் தலைவராக களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநரான வெங்கடேஷ் உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக பகுதியில் 1994 முதல் 2001 வரையில் சூழல் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அது வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே குமரி முதல் குமுளி வரை உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கிராம வனக்குழு அமைக்கப்பட்டு, அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக, வனத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவர்கள் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டனர். இந்தக் குழுவின் தலைவராக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், செயலராக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனவரும் நியமிக்கப்பட்டனர். வனக் குழுக்கள் அனைத்தும் தமிழ்நாடு சங்க பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு: உயிர்ப் பன்மை பாதுகாப்பு குறித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மலையடிவார கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மரங்களின் பயன்கள், வனவிலங்குகள், பறவைகளால் ஏற்படும் நன்மைகள், மரங்களை அழிப்பதால் ஏற்படும் வறட்சி, இயற்கை சீற்றம் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காடுகள் நம் சொத்து, காடுகளை பாதுகாக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை என்ற எண்ணம் மலையடிவார மக்களின் மனதில் விதைக்கப்பட்டது.
ரூ.2.30 கோடி கடனுதவி: கிராம வனக்குழுக்கள் மூலம் நுண் திட்டம் தயாரிக்கப்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குத் தேவையானவற்றை செய்ததோடு, விறகுக்காக மரம் வெட்டுபவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அவர்கள் தங்களின் தேவைக்காக தங்களின் சொந்த இடங்களில் மரம் வளர்க்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதேபோல் மாற்றுத் தொழில் செய்வதற்கும், டீக்கடை, மளிகைக் கடை மற்றும் நாட்டுக் கோழி பண்ணை வைப்பதற்கும் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு கணினி பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி, தேனீ வளர்ப்பு பயிற்சி என அந்தந்தப் பகுதிகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏராளமானோர் அரசுத் துறையில் ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்குச் சென்றுள்ளனர். தொண்டு நிறுவனங்கள் மூலம் கடனுதவி அளித்தல் மற்றும் கடனை திரும்ப வாங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி வன உயிரின சரணாலயப் பகுதியில் 19, களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக பகுதியில் 43, திருநெல்வேலி வன உயிரின சரணாலயப் பகுதியில் 30, ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயப் பகுதியில் 52, மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் 30 என மொத்தம் 174 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.2.30 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார முன்னேற்றம்: வனச் சுற்றுலா மூலம் காடுகளில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள், அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பலனாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சல் மூலம் மரக்கன்றுகள் அழிக்கப்படுவது, விறகுக்காக மரங்கள் வெட்டப்படுவது, காடுகளில் தீ வைக்கப்படுவது, வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது போன்றவை தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர். பலர் முதுநிலைக் கல்வி பயின்றுள்ளனர். கந்து வட்டி ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளனர். மேலும் யாராவது விலங்குகளை வேட்டையாடினாலோ, மரங்களை வெட்டினாலோ அது தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கிறார்கள். காடுகளில் எப்போதாவது தீப்பிடித்தால், அதை அணைப்பதற்கு மலையடிவார கிராம மக்கள், வனத்துறையினருக்கு உதவியாக இருக்கிறார்கள் என்றார்.
இந்தத் திட்டம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடையவுள்ளது. இந்தத் திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அதனால் ஏராளமான கிராமங்கள் பயன்பெறும் என மலையடிவார கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


